மஹிந்த, பிரியங்கர ஆகியோரின் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை

1 Min Read

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ‘எயார்பஸ்’ விமானக் கொள்வனவு விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரியளவு நிதி மோசடி மற்றும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் புதிய திருப்பத்தை எட்டியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மற்றும் வில்லி கமகே ஆகியோரிடம் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களை அடுத்த வழக்குத் தவணையின் போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக இலஞ்ச ஊழல்,விசாரணை ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் ஒரு அம்சமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன ஆகியோரிடம் நேற்று முன்தினம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வாக்குமூலங்கள் அடங்கிய அறிக்கைகள் அனைத்தும் உரிய சட்ட நடைமுறைகளின் கீழ் நீதிமன்றத்திடம் கையளிக்கப்படவுள்ளன.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மறைவு எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான தற்போதைய விசாரணைகளுக்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய கபில சந்திரசேனவின் மனைவி தற்போது வெளிநாட்டில் வசித்து வருவதால், அவருக்கு எதிராக நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள சந்தேகநபரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சர்வதேச ஒத்துழைப்புகளைப் பெற்றுக்கொள்ளவும் பொலிஸ் விசேட பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *