மத்திய வங்கி, நிதியமைச்சு இணைந்து நடவடிக்கை

1 Min Read

நிதியமைச்சின் கணினி கட்டமைப்பில் 2.5 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ள நிலையில் அது போன்ற மோசடிகள் மீண்டும் ஏற்படாமலிருப்பதை உறுதி செய்யும் வகையில் மத்திய வங்கியும் நிதியமைச்சும் இணைந்து நெருக்கமாக செயற்பட்டு வருவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மேற்படி கணினி மோசடி சம்பவத்திற்குப் பின் மத்திய வங்கியானது நிதியமைச்சுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது. இந்த முறையை எவ்வாறு பலப்படுத்தலாம் என்பது தொடர்பிலும் எமது அனுபவம் மற்றும் ஆற்றலைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய வங்கிக்கு ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் ‘Cross-check’ செய்யும் பொறுப்பு வருகிறதா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், அவ்வாறில்லை.. ஒரு எளிய உதாரணத்தை தெரிவித்தால்; எனது வங்கிக் கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட நபரின் கணக்கிற்குப் பணம் செலுத்துமாறு வங்கிக்கு நான் உத்தரவிடும்போது, கணக்கு இலக்கம் சரியாக இருந்து, முறைமை ஊடாகப் பணம் செலுத்தப்படுமானால், அதனைச் செய்வது மட்டுமே வங்கியின் வேலையாகும். அதற்கு அப்பால் சென்று அந்த அறிவுறுத்தல்களை மாற்றுவதற்கு வங்கிக்கு உரிமை கிடையாது. வங்கியாளர் என்ற ரீதியில் எமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை மாற்றுவதற்கு எமக்கும் உரிமை இல்லை. பணம் செலுத்திய பின்னர் அது நிகழ்ந்துவிடும். அதன் பின்னர் மறுமுனையில் பணம் சென்றடைந்ததா இல்லையா என்பதை ‘Statement’ மூலம் பார்ப்பதற்கு எமக்கு வசதி கிடையாது. அந்த ‘Statement’ அவுஸ்திரேலியாவிலுள்ள சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கே கிடைக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *