அரசாங்க நிறுவனங்களில் பதவிகளுக்கு கட்சி பேதமின்றி நியமனம்

1 Min Read

அரசாங்க நிறுவனங்களில் காணப்படும் அனைத்துப் பதவிகளையும் கட்சி விசுவாசிகளைக் கொண்டு நிரப்பும் பழைய தவறான கலாசாரத்தைத் தமது அரசாங்கம் நிராகரிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்களில் பதவிகளுக்கு நபர்களை நியமிக்கும்போது அந்த நபர்களின் அரசியல் கட்சி தொடர்பில் பார்க்காமல் அவர்களின் திறமையையும் ஆற்றலையும் கருத்திற் கொள்ளும் ஒரு புதிய அரசியல் கலாசாரம் நாட்டில் நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னைய அரசாங்கங்களின் கீழ், அரச நிறுவனங்களில் பதவிகளின் பங்கீடு, கட்சி அரசியலை அடிப்படையாகக் கொண்டிருந்தது.ஆனால் தற்போதைய அரசாங்கம் அந்த முறையை மாற்றியுள்ளது. அரச நிறுவனங்களிலுள்ள அனைத்துப் பதவிகளையும் எமது கட்சியைச் சேர்ந்தவர்களைக் கொண்டு நிரப்புவதற்காக நாம் ஆட்சிக்கு வரவில்லை. திறமையானவர்களைக் கொண்டு அந்தப் பதவிகளை நிரப்பவே நாம் விரும்புகிறோம். அதற்காக நாம் அவர்களின் அரசியல் கட்சியைத் தேடிச் செல்ல மாட்டோம் என தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கிரிக்கெட் சபை போன்ற நிறுவனங்களுக்குத் திறமையானவர்கள் எவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர் ஒரு உதாரணமாகச் சுட்டிக்காட்டினார். அரசாங்கம் என்ற வகையில் , தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று நினைப்பது ஒரு மாயை எனச் சுட்டிக்காட்டிய ரில்வின் சில்வா, எந்தவொரு துறையிலும் மிகவும் திறமையான நபர்களின் உதவியை நாடுவதே அரசாங்கத்தின் கொள்கை என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *