பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய டெல்லி கெபிடல்ஸ் அணி ஐபிஎல் பிளே ஓஃப் வாய்ப்பை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது. எனினும் இம்முறை தொடரில் முதல் ஏழு போட்டிகளிலும் தோல்வியூறாது முதல் இடத்தை தக்கவைத்திருந்த பஞ்சாப் தொடர்ந்து 4 ஆவது போட்டியில் தோல்வியை சந்தித்து 4 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
தர்மசாலாவில் வேகப்பந்துக்கு சாதகமான மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றதால் அரிதான சம்பவமாக ஒட்டுமொத்த போட்டியிலும் வீசப்பட்ட 39 ஓவர்களையும் வேகப்பந்து வீச்சாளர்களே வீசினர். ஐபிஎல் வரலாற்றில் இவ்வாறு போட்டி முழுவதும் வேகப்பந்து வீச்சாளர்கள் மாத்திரம் பயன்படுத்தப்பட்டது இதற்கு முன்னர் ஒரு முறை மாத்திரே நிகழ்ந்துள்ளது. அது 2008 இல் பெங்களூருவில் நடந்த சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியிலாகும்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட பஞ்சாப் அணி அதன் தலைவர் ஷரேயஸ் ஐயர் (59) மற்றும் ஆரம்ப வீரர் பிரியான்ஷ் ஆர்யாவின் (56) அரைச்சதங்களின் மூலம் 20 ஓவர்களுக்கும் 5 விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலெடுத்தாடிய டெல்லி கெபிடல்ஸ் முதல் மூன்று விக்கெட்டுகளையும் 33 ஓட்டங்களுக்கு இழந்தபோதும் மத்திய வரிசையில் அணித் தலைவர் அக்ஸார் படேல் (56) மற்றும் டேவிட் மில்லர் (51) அதிரடி அரைச் சதங்களைப் பெற்றனர். இதன்மூலம் அந்த அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 216 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.



