ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பிணை வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக, அவரது உறவினர்கள் எனக்கூறி போலி பிணையாளர்கள் இருவர் நீதிமன்றில் முன்னிலையானமை தெரியவந்தமையை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கபில சந்திரசேனவின் பிணை நிபந்தனைகளின்படி, அவரது நெருங்கிய உறவினர்கள் மூவர் ஆள் பிணை வழங்க வேண்டியிருந்தது.
இதற்காக உறவினர்களாக முன்னிலைப்படுவதற்குச் சந்தேக நபர்கள் தலா ரூ. 15,000 பணமாகப் பெற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் பிணை நிபந்தனைகளை மீறி நீதிமன்றத்தின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளமையால், கபில சந்திரசேனவை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று உத்தரவிட்டார்.
இதனையடுத்து கபில சந்திரசேனவை கைது செய்வதற்காக பொலிஸார் அவரைத் தேடி வந்த நிலையில் கொள்ளுப்பிட்டியில் உள்ள வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



