இலங்கையின் பொதுப்போக்குவரத்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த 4ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட மெட்ரோ பேருந்து (Metro Bus) சேவைக்காக, மற்றுமொரு நவீன சேவை வழங்கல் மற்றும் பராமரிப்பு நிலையத்தின் (Bus Depot) கட்டுமானப் பணிகள் ரத்மலானையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இதன் கட்டுமானப் பணிகளை 91 நாட்களுக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதோடு, இந்த நவீன முனையத்தை அமைப்பதற்காக சுமார் ரூ. 120,626,289.00 (120 மில்லியன்) மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
டிரான்சிட் (தனியார்) நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ‘எலக்ட்ரோ மெட்டல் பிரசிங்’ (Electro Metal Pressing) நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்கிறது.
வலைப்பின்னல்: மெட்ரோ பேருந்து சேவையை வலுப்படுத்த இலங்கை முழுவதும் 05 பிரதான சேவை நிலையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தெஹிவளை – கல்கிசை பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சமன்மலி குணசிங்க இந்த நிகழ்வில் கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
இதன்போது அவர் உரையாற்றுகையில்:
“மக்களுக்கு வசதியான மற்றும் கௌரவமான போக்குவரத்து முறையை உருவாக்குவதே எமது அரசின் முக்கிய நோக்கம். எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் சுமார் 108 புதிய மெட்ரோ பஸ்களை மக்கள் சேவையில் இணைக்கவுள்ளோம். ரத்மலானை டிப்போவில் பயன்படுத்தப்படாது இருந்த காணிகளைப் பயன்படுத்தி இந்த நவீன நிலையத்தை அமைக்கிறோம். ஒரு வளமான நாட்டில் புதிய விடயங்களை மக்களுக்காக ஆரம்பிப்பதே எமது அரசாங்கத்தின் கனவாகும்.” என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் அவந்தி சேனாரத்ன, லங்கா மெட்ரோ டிரான்சிட் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் கட்டுமான நிறுவனத்தின் பிரதிநிதிகள் எனப் பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்தத் திட்டம் பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதோடு, பயணிகளுக்கு வினைத்திறனான மற்றும் அழகான பயண அனுபவத்தை வழங்கும் ஒரு மாபெரும் முயற்சியாகக் கருதப்படுகிறது.



