பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டி ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒரு மாதம் அளவான காலமே இருக்கும் நிலையில் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையில் தொடர்ந்து மந்த நிலை இருப்பதோடு பெரும்பாலான குழுநிலைப் போட்டிகளின் டிக்கெட்டுகள் இன்னும் விற்பனைக்கு உள்ளன.
போட்டியை இணைந்து நடத்தும் அமெரிக்கா மற்றும் பரகுவாவுக்கு இடையே எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட்டுகளும் இன்னும் விற்பனைக்கு உள்ளன. இந்தப் போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை 1,120 டொலர் என்பதோடு அதிகபட்சம் 4,105 டொலர்களாக உள்ளது. இதில் விருந்தோம்பல் பிரிவின் கீழ் டிக்கெட் ஒன்றின் விலை 6,050 டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டிகளுக்கான அதிக டிக்கெட் விலை குறித்து கால்பந்து ரசிகர்கள் ஏற்கனவே தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். கடந்த டிசம்பரில் டிக்கெட் விற்பனையின் முதல் கட்டம் ஆரம்பிக்கபட்டதில் இருந்து இறுதிப் போட்டிக்கான மிகவும் விலையுயர்ந்த டிக்கெட்டின் விலை சுமார் 11,000 டொலர்களாக உள்ளது.
கடந்த செப்டெம்பர் தொடக்கம் பல்வேறு கட்டங்களில் வெளியிடப்பட்ட ‘கடைசி நேர டிக்கெட் விற்பனை’ பிரிவில் உள்ள டிக்கெட்டுகள் இன்னும் விற்பனைக்காக பிஃபா உத்தியோகபூர்வ இணையதளத்தில் உள்ளது.



