தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. பல தசாப்தங்களாக தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு துருவங்களுக்கு இடையே மட்டுமே சுழன்று கொண்டிருந்த தமிழக அரசியல் களம், தற்போது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வருகையால் ஒரு பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. இது வெறும் ஒரு நடிகரின் அரசியல் பிரவேசம் மட்டுமல்ல, பாரம்பரிய அரசியல் கட்டமைப்பையே அசைத்துப் பார்க்கும் ஒரு “மூன்றாவது சக்தியின்” எழுச்சியாகப் பார்க்கப்படுகிறது.
விஜய்யின் அரசியல் பிரவேசம்; ஒரு மாற்று சக்தி
விஜய்யின் அரசியல் வருகை என்பது தற்செயலான ஒன்று அல்ல. நீண்ட காலத் திட்டமிடலுக்குப் பிறகு, தனது ரசிகர் மன்றங்களை “மக்கள் இயக்கமாக” மாற்றி, பின் அதனை ஒரு அரசியல் கட்சியாக உருமாற்றியுள்ளார். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற சமத்துவக் கொள்கையைத் தனது கட்சியின் தாரக மந்திரமாகக் கொண்டுள்ள விஜய், தி.மு.கவை தனது “அரசியல் எதிரி” என்றும், பா.ஜ.கவை தனது “கொள்கை எதிரி” என்றும் மிகத் தெளிவாக அடையாளப்படுத்தியுள்ளார்.
பாரம்பரிய அரசியல் கட்சிகள் மீது அதிருப்தியில் இருக்கும் இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் நகர்ப்புற வாக்காளர்கள் ஆகியோரை விஜய் நேரடியாகக் குறிவைக்கிறார். இவருடைய பலம் வெறும் திரைப்பிரபலம் என்பது மட்டுமல்ல; அடிமட்ட அளவில் வலுவாக இருக்கும் ரசிகர் மன்றக் கட்டமைப்புகளே ஆகும்.
வாக்கு வங்கியில் ஏற்படும் பிளவு யாருக்குப் பாதிப்பு?
அரசியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, விஜயின் வருகை மதச்சார்பற்ற வாக்குப்பிளவை ஏற்படுத்தும். அதாவது, இது ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டும் பாதிக்காமல், அனைத்துத் தரப்பு வாக்குகளையும் பிரிக்கும் வல்லமை கொண்டது.
அ.தி.மு.கவுக்கான பாதிப்பு:
பொதுவாக தி.மு.கவுக்கு எதிரான வாக்குகள் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.கவுக்கே செல்லும். ஆனால், விஜய் களத்தில் இருப்பதால், அந்த எதிர்ப்பு வாக்குகள் சிதற வாய்ப்புள்ளது. குறிப்பாக, அ.தி.மு.கவின் கோட்டையாகக் கருதப்படும் பல இடங்களில் விஜய்யின் “விசில்” சின்னம் கணிசமான வாக்குகளைப் பெறக்கூடும்.
தி.மு.கவுக்கான பாதிப்பு:
ஆளுங்கட்சியான தி.மு.கவுக்கு எதிரான அதிருப்தி வாக்குகளைத் தாண்டி, அவர்களின் பாரம்பரிய ஆதரவுத் தளங்களான தலித் வாக்குகள் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளிலும் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, விஜய் ஒரு கிறிஸ்தவப் பின்னணியைக் கொண்டவர் என்பதால், தென் மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ வாக்குகள் பிளவுபடக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தேர்தல் களத்தில் நிலவும் காரசாரமான விவாதங்கள்
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் தி.மு.க மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். முதல்வர் மு.க. ஸ்டாலினின் குடும்ப அரசியல், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் தமிழ் நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு போன்றவற்றை முன்வைத்து பா.ஜ.க பிரசாரம் செய்து வருகிறது. “தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், அது தேசிய ஜனநாயகக் கூட்டணியால் (NDA) மட்டுமே சாத்தியம்” என்று பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மறுபுறம், தி.மு.க தனது திராவிட மாதிரி ஆட்சியின் நலத்திட்டங்களை முன்வைத்து தற்காப்பு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. மகளிர் உரிமைத் தொகை, இலவசப் பேருந்து பயணம் போன்ற திட்டங்கள் தங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும் என தி.மு.க நம்புகிறது.
விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள்: கவர்ச்சிகரமா?
நடைமுறைக்குச் சாத்தியமா?
த.வெ.க தலைவர் விஜய், தனது பிரசாரங்களில் அதிரடியான பல வாக்குறுதிகளை அளித்துள்ளார்:
வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்.
பெண்களுக்கு பாதுகாப்பான பயணம் மற்றும் கல்விக்கான முன்னுரிமை.
போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குதல்
போன்றவை அவரது தேர்தல் வாக்குறுதிகளில் சிலவாகும்.
இந்த வாக்குறுதிகள் இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆனால், “எம்.ஜி.ஆர் போல் ஒரு மாயாஜாலத்தை விஜய்யால் நிகழ்த்த முடியுமா?” என்ற கேள்வியும் எழுகிறது. எம்.ஜி.ஆர் தனது படங்களில் விதைத்த சமூக நீதி மற்றும் ஏழை எளியோர் மீதான அக்கறை அவரை ஒரு மக்கள் தலைவராக மாற்றியது. அதேபோன்ற ஒரு பிம்பத்தை விஜய் உருவாக்க முயன்றாலும், இன்றைய சமூக ஊடகக் காலத்தில் வாக்காளர்கள் மிகத் தெளிவாக உள்ளனர்.
வாக்குகள் சிதறடிக்கப்படுமா அல்லது புதிய தொடக்கமா?
விஜய் இந்தத் தேர்தலில் ஒரு ‘ஸ்பொய்லர்’ எனப்படும் வாக்குகளைப் பிரிப்பவராக மட்டுமே இருப்பாரா அல்லது ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறுவாரா என்பதுதான் தற்போதைய விவாதம். 2006இல் விஜயகாந்தின் தே.மு.தி.க 8% வாக்குகளைப் பெற்று பல தொகுதிகளில் முடிவுகளை மாற்றியது போல, விஜய் 11% முதல் 15% வரை வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் சொல்லும் ஒரு முக்கியமான கவனிப்பு என்னவென்றால், விஜய்யின் கூட்டத்துக்கு வரும் கூட்டத்தில் 40% பேர் 13 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள். அவர்களுக்கு வாக்குரிமை இல்லை. எனவே, கூட்டத்தை வைத்து மட்டுமே ஒரு கட்சியின் வெற்றியைத் தீர்மானிக்க முடியாது. ஆனால், அதே சமயம் சமூக ஊடகங்கள் வழியாக அவர் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் இளைஞர்களின் மனநிலை விஜய்க்குச் சாதகமாக மாறினால், அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
கூட்டணி அரசியலின் குழப்பங்கள்
2026 தேர்தலில் கூட்டணிக் கணக்குகளும் பெரும் குழப்பத்தில் உள்ளன. தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இடப் பங்கீடு மற்றும் அதிகாரப் பகிர்வு விஷயத்தில் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. அ.தி.மு.க, பா.ஜ.க மற்றும் விஜய் ஆகிய மூன்று தரப்புகளும் தனித்தனியாகவோ அல்லது புதிய கூட்டணிகளாகவோ களம் காணும்போது, வாக்குகள் பலமுனைப் போட்டியில் சிதறப்போவது உறுதி.
சுருக்கமாகச் சொன்னால், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல; அது தமிழக அரசியலின் அடுத்த 25 ஆண்டுகளைத் தீர்மானிக்கப்போகும் ஒரு களம். நடிகர் விஜய் ஒரு ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை விதைப்பாரா அல்லது பாரம்பரிய திராவிடக் கட்சிகளின் பலத்திற்கு முன்னால் வீழ்வாரா என்பது மக்களின் கைகளில்தான் உள்ளது.
விஜய்யின் அரசியல் பயணம் வெற்றி பெற வேண்டுமெனில், அவர் வெறும் “திரை நட்சத்திரமாக” இல்லாமல், மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்காகக் களத்தில் நின்று போராடும் ஒரு “மக்கள் தலைவராக” தன்னை நிரூபிக்க வேண்டும். தமிழக மக்கள் எப்போதும் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பவர்கள்; அவர்கள் மாற்றத்தை விரும்பினாலும், அந்த மாற்றம் நிலையானதாக இருக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்பார்கள்.



