புத்தளம் தள வைத்தியசாலையில் வெற்றிகரமாக நடந்தேறிய முள்ளந்தண்டு சத்திர சிகிச்சை

1 Min Read

புத்தளம் தள வைத்தியசாலை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், மிகவும் சிக்கலான முள்ளந்தண்டு நேராக்கல் (Scoliosis Correction) சத்திரசிகிச்சை அண்மையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இலங்கையின் ஒரு தள வைத்தியசாலையில் (Base Hospital) இச்சிகிச்சை இடம்பெற்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

கடந்த சில மாதங்களாகவே புத்தளம் தள வைத்தியசாலையில் பல்வேறு முள்ளந்தண்டு சத்திரசிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும், முள்ளந்தண்டு வளைவைச் சீர்செய்யும் இந்த ‘Scoliosis Correction’ சிகிச்சை அங்கு இடம்பெற்றது இதுவே முதல் முறையாகும். பொதுவாக இச்சிகிச்சையானது கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், பதுளை மற்றும் இரத்தினபுரி போன்ற பிரதான போதனா வைத்தியசாலைகளில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. என்பு முறிவு விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஷெஸார் ஹமீத் தலைமையில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. இவருடன் தேசிய வைத்தியசாலையின் சிரேஷ்ட என்பு முறிவு விசேட வைத்திய நிபுணர் டாக்டர் உதை டி சில்வா,

லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் நிர்மல் மாரசிங்ஹ, நினைவிழக்கச் செய்யும் விசேட வைத்தியர் (Anesthetist) டாக்டர் சரிந்த ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் இப்பணியை செவ்வனே நிறைவேற்றினர்.

தனியார் மருத்துவமனைகளில் 40 இலட்சம் ரூபாவுக்கும் அதிக செலவு ஏற்படும் இந்த உயர்தர சிகிச்சை, புத்தளம் வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் சாதனையைப் பாராட்டியுள்ள வைத்தியசாலை நிர்வாகம், புத்தளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் இனி இத்தகைய சிக்கலான சிகிச்சைகளுக்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த வைத்தியர் எச்.எம்.ஹனான் அஹ்மத், இவ்வாறான சிகிச்சைகள் எதிர்வரும் காலங்களிலும் புத்தளத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த வெற்றியானது புத்தளம் வைத்தியசாலையின் மருத்துவத்தரத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றுள்ளதுடன், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *