நிலக்கரி ஊழல் விசாரணை: அமைச்சர் குமார ஜயகொடி, செயலாளர் இராஜினாமா! – சுயாதீன, பக்கச்சார்பற்ற விசாரணைக்கு இடமளிக்கும் வகையில் முடிவு

1 Min Read

நிலக்கரி இறக்குமதியின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதச் செயல்கள் குறித்த பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணைகளுக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இன்று (17) பிற்பகல் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமது பதவி விலகல் கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

நிலக்கரி இறக்குமதி மற்றும் அது சார்ந்த மின்சார உற்பத்தி நடவடிக்கைகளில் ஊழல்கள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்று (17) விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழுவின் சுயாதீனமான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கிலேயே அமைச்சரும் செயலாளரும் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிக்குத் தனது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்துள்ள அமைச்சர் குமார ஜயகொடி, 2009 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற நிலக்கரி இறக்குமதிகள் தொடர்பில் முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலையும், விசேட விசாரணை ஆணைக்குழுவை நியமித்தமையையும் தான் பாராட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஊழலுக்கு எதிரான ஜனாதிபதியின் துணிச்சலான தீர்மானத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ள அவர், விசாரணை இடம்பெறும் காலப்பகுதியில் தான் அப்பதவியில் நீடிப்பது விசாரணைக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அடிப்படையிலேயே பதவி விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபாலவும் தனது கடிதத்தில், ஆரம்பிக்கப்படவுள்ள விசாரணைகளின் சுதந்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும், அதற்கு எவ்விதத் தடையும் ஏற்படாமல் இருக்கவும் தான் பதவி விலகுவது பொருத்தமானது என நம்புவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலக்கரி விலைமனு விவகாரத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சியினர் அண்மையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்த பின்னணியில், இந்தத் திடீர் பதவி விலகல்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *