இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இந்தியா வந்துள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் (Sergio Gor), ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தை “இந்தியாவின் ஒரு முக்கியமான பகுதி” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீநகரில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவை (Omar Abdullah) அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் அமெரிக்கா மற்றும் ஜம்மு காஷ்மீர் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புகள் குறித்து ஆராயப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு சூழல் கணிசமாக மேம்பட்டுள்ளதை தூதுவர் பாராட்டியுள்ளார். இதனால், அமெரிக்க குடிமக்களுக்கு ஜம்மு காஷ்மீர் செல்வது தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கையை தளர்த்துவது குறித்து வொஷிங்டன் பரிசீலிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
காஷ்மீர் மிகவும் அழகான பகுதி என்றும், அமெரிக்கர்கள் பலரும் இங்கு வருகை தந்து இதன் அழகை அனுபவிக்க விரும்புவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு மிகவும் சாதகமாக அமைந்தது என்றும், அமெரிக்கா மற்றும் ஜம்மு காஷ்மீர் இடையிலான உறவு വரும் ஆண்டுகளில் மேலும் விரிவடையும் என்றும் நம்புவதாக முதல்வர் கூறினார்.




