ஞான பிரசாந்தன், மொஹமட் றிஷாட்
‘சமாதானம் மற்றும் மனிதநேயத்திற்கான ஒரு படி’ என்ற கருப்பொருளின் கீழ், இலங்கையின் பிரதான சர்வதேச மரதன் ஓட்டப் போட்டியான 2026 கொழும்பு மரதன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய விளையாட்டு சுற்றுலா வரைபடத்தில் இலங்கையை ஒரு முக்கிய இடத்திற்கு கொண்டு வரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலாவது கொழும்பு மரதன் போட்டி எதிர்வரும் செப்டெம்பர் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் 4,000இற்கும் அதிகமான சர்வதேச மற்றும் உள்ளூர் வீரர்கள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டி தொடர்பில் அறிவிக்கும் ஊடக சந்திப்பு கொழும்பில் நேற்று முன்தினம் (04) நடைபெற்றது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளர் அருண பண்டார மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த சிறப்பு ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே கருத்து தெரிவிக்கையில், ‘2026 கொழும்பு மரதன் என்பது, சர்வதேச விளையாட்டுத் துறையில் இலங்கையை மேலும் வலுவாக நிலைநிறுத்துவதற்காக நாங்கள் முன்னெடுக்கும் முயற்சியின் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்நிகழ்வு விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன், இளையோர் சமுதாயத்தை விளையாட்டில் தீவிரமாக ஈடுபட ஊக்குவிக்கிறது. மேலும், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தக்கூடிய ஒரு இடமாக இலங்கையை சர்வதேசத்திற்கு அறிமுகப்படுத்தவும் இது பங்களிக்கும் என்றார்.
அனைத்து மட்ட வயதுப் பிரிவினர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இப்போட்டி முழு மரதன் (42.195 கி.மீ.), அரை மரதன் (21.097 கி.மீ.), 10 கி.மீ. வீதி ஓட்டம், 5 கி.மீ. வினோத ஓட்டம், சிறுவர்களுக்கான மினி ஓட்டம் ஆகிய 5 பிரிவுகளாக நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டிகளுக்கான முன்பதிவுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலதிக விபரங்கள் மற்றும் பதிவுகளுக்கு www.colombomarathan என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். இந்தப் போட்டியின் பிரதான அனுசரணையாளராக யூனியன் அசூரன்ஸ் நிறுவனமும், பிரதான பலப்படுத்தும் பங்காளராக எலிபஃன்ட் ஹவுஸ் நிறுவனமும் இணைந்துள்ளன.




