இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் சுப்பர் லீக் தொடரில் டிபன்டர்ஸ் கால்பந்து கழகத்தை 2–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய புளூ ஈகல்ஸ் அணி முதல் வெற்றியை பெற்றது.
கொழும்பு, சுகததாச அரங்கில் மூன்றாவது வாரத்தின் கடைசிப் போட்டியாக நேற்று (05) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 20 ஆவது நிமிடத்தில் ஸ்டீபன் பெர்னாண்டோ பெற்ற கோல் மூலம் புளூ ஈகஸ்ல் முதல் பாதியில் 1–0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில் 84 ஆவது நிமிடத்தில் டொக்கு பெலிக்ஸ் மூலம் புளூ ஈகல்ஸ் மற்றொரு கோலை புகுத்தி வெற்றியை உறுதி செய்தது.
புளூ ஈகல்ஸ் அணி இதுவரை மூன்று லீக் போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி மற்றும் ஒரு சமநிலையுடன் 4 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் 5 ஆவது இடத்தில் உள்ளது. எனினும் டிபென்டர்ஸ் இதுவரை ஆடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றியைக் கூட பெறத் தவறியுள்ளது.
மூன்றாவது வார நிறைவில் ரினோர் 3 போட்டிகளிலும் தோல்வியுறாத அணியாக 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதோடு அப்கன்ட்ரி லயன்ஸ் அணியும் தனது மூன்று போட்டிகளிலும் வெற்றியீட்டியபோதும் கோல் வித்தியாத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது.




