பாகிஸ்தான் மகளிர் அணிக்கு இலங்கையிடம் ஆறுதல் வெற்றி

1 Min Read

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி 4 விக்கெட்டுகளால் ஆறுதல் வெற்றியை பெற்றது. இந்த டி20 தொடரை இலங்கை அணி 2–1 என கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச அரங்கில் நேற்று (04) நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை மகளிர் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் தடுமாற்றம் கண்டது. ஆரம்ப வீராங்கனையாக வந்த அணித் தலைவி சமரி அத்தபத்து வழக்கத்துக்கு மாறாக மந்தமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 33 பந்துகளில் 5 பௌண்டரிகளுடன் பெற்ற 34 ஓட்டங்களுமே அதிக ஓட்டங்களாக இருந்தன. முக்கிய இடைவெளிகளில் விக்கெட்டுகள் பறிபோனதால் இலங்கை வீராங்கனைகள் ஓட்டங்களை அதிகரிக்கத் தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களையே பெற்றது. பந்துவீச்சில் மொனிமா ரியாசத் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த பாகிஸ்தான் மகளிர்கள் சார்பில் மத்திய வரிசையில் அயேஷா சபர் 31 பந்துகளில் 6 பௌண்டரிகளுடன் பெற்ற 39 ஓட்டங்களும் அந்த அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. இதன்மூலம் வெற்றி இலக்கை நெருங்கிய பாகிஸ்தான் அணிக்கு சைரா ஜபீன் கடைசி நேரத்தில் விக்கெட்டை காத்து 16 பந்துகளில் ஆட்டமிழக்காது 12 ஓட்டங்களைப் பெற்று அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதன்மூலம் பாகிஸ்தான் மகளிர் அணி 18.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்களை எட்டியது. இதன்போது இலங்கை சார்பில் சமரி அத்தபத்துவுடன் கவிஷா டில்ஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் மகளிர் அணி ஏற்கனவே இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரையும் 2–1 என இழந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *