புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்குத் தேவையான திறன்மிக்க தொழில்நுட்ப நிபுணர்களை உருவாக்கும் நோக்கில், புதிய பயிற்சி நிலையம் ஒன்றை நிறுவ அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது நாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் அதிகரித்து வரும் பயிற்சித் தேவையை கருத்திற்கொண்டு, இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை–ஜெர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் மற்றும் இலங்கை நிலைபேறு ஆற்றல் அதிகார சபை ஆகியவற்றுக்கிடையில் 2025 பெப்ரவரி 10ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
புதிய பயிற்சி நிலையம், இலங்கை மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான மயூரபுர பிரிவில் 3.11 ஹெக்டேயர் காணியில் அமைக்கப்படவுள்ளது. கிரி இப்பன்வெவ மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் மற்றும் இலங்கை நிலைபேறு ஆற்றல் அதிகார சபையின் ஹம்பாந்தோட்டை பயிற்சி நிலையத்திற்கு அண்மையில் இந்த மையம் அமைக்கப்படுவதால், மாணவர்களுக்கு நேரடி செய்முறைப் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைக்கும். மேலும், இந்தப் புதிய பயிற்சி நிலையம், தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயிற்சி மையமாக செயல்படவுள்ளது.
இதன் மூலம் சூரிய மின்சக்தி, காற்றாலை மின்சக்தி, நீர்மின் உற்பத்தி, உயிரிவாயு உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்கள் தொடர்பான கோட்பாட்டு மற்றும் செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டு, துறைக்குத் தேவையான திறமையான தொழில்நுட்ப நிபுணர்கள் உருவாக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.398 மில்லியன் செலவில் உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி இந்தப் பயிற்சி நிலையத்தை நிர்மாணிக்கும் யோசனையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் அமைச்சரவையில் முன்வைத்திருந்தார்.




