பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஒரு வருட கால சேவை நீடிப்பு

1 Min Read

சேவைக்காலங்களில் நன்னடத்தையுடன் பணியாற்றிய 60 வயதைப் பூர்த்திசெய்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேலும் ஒரு வருட கால சேவை நீடிப்பை வழங்குவதில், அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது;

பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்குள் பொலிஸ் சேவையில் 7800 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ள இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு,தற்போது தொடர்ச்சியாக நேர்முகப்பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றன.பொலிஸ் துறையின் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த 10,000 உறுப்பினர்கள் பொலிஸ் சேவைக்கு இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6,000 பேர் ஏற்கனவே கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர். பொலிஸ் பயிற்சி கல்லூரியில் 200 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.பொலிஸ் திணைக்களத்தில் மனிதவள பற்றாக்குறை நிலவுவதை ஏற்றுக்கொள்கிறோம். இந்த பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்து, குறிப்பாகக் கீழ்நிலை அதிகாரிகள் எதிர்கொள்ளும் பணிச்சுமையை குறைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மேலும், விசேட அதிரடிப்படை உள்ளிட்ட பிரிவுகளுக்கான மேலதிக ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது., இந்த ஆண்டுக்குள் மொத்தம் 7,800 புதிய உத்தியோகத்தர்களை சேவையில் இணைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.இதன் மூலம் பொலிஸ் துறையின் செயற்பாட்டு திறனை மேம்படுத்த முடியும்.மேலும், பொலிஸ் துறை தமது பொறுப்புகளை திறம்பட நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *