இந்தியாவில் ஐதரசன் எரிபொருளில் இயங்கும் வகையிலான ரயில் என்ஜினை தயாரிக்க கடந்த 2022ஆம் ஆண்டு முயற்சிகள் தொடங்கின. கடந்த 2020-21ஆம் ஆண்டில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் வடக்கு மண்டல ரயில்வே இந்தத் திட்டத்தை 2022, ஏப்ரலில் தொடங்கியது. இந்தத் திட்டத்துக்கான விலைமனு ஐதராபாத்தைச் சேர்ந்த மேதா என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்நிறுவனம்தான் எரிபொருட்களை விநியோகம் செய்கிறது.
ஐதரசன் ரயிலை வடிவமைக்கும் பணிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் நடைபெற்றன. பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து சோதனை ஓட்டங்களும் நடந்தன. இதையடுத்து, ரெயிலை அறிமுகப்படுத்த கடந்த மே மாதம் ரயில்வே சபை ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், ஐதரசன் ரயிலின் அறிமுகம் எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெற உள்ளது. மின்மயம் ஆக்கப்படாத வழித்தடமான அரியானா மாநிலத்தின் ஜிந்த் நகரில் இருந்து சோனிபட்டுக்கு இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் முதன்முதலாக உலகின் முதல் ஐதரசன் பயணிகள் ரயில் 2018ஆம் ஆண்டில் இயக்கப்பட்டது. அதன்பின் ஜப்பான், சீனா, அமெரிக்கா ஆகியவை தங்கள் நாடுகளில் தயாரிக்கப்பட்ட ஐதரசன் ரயிலை இயக்கின என்பது குறிப்பிடத்தக்கது.




