மத்திய காசாவில் இஸ்ரேல் நேற்று முன்தினம் முன்னெடுத்த தாக்குதல்களில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் அல் ஜசீரா தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளரும் ஒரு சிறுவரும் அடங்கியுள்ளனர்.
வீடொன்றை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட இத்தாக்குதலில் தங்கள் செய்தியாளர் அகமது விஷா கொல்லப்பட்டமைக்கு அல் ஜசீரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது அனைத்து சர்வதேச சட்டங்கள், நெறிமுறைகளின் அப்பட்டமான மீறல். பத்திரிகையாளர்களைக் குறிவைப்பதன் மூலம் உண்மையின் குரலை ஒடுக்கும் தொடர்ச்சியானதும், திட்டமிட்டதுமான கொள்கையைப் பிரதிபலிக்கிறது என்றும் அல் ஜசீரா குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல், விஷா ஹமாஸின் இராணுவப் பிரிவில் ஒரு குறி பார்த்து சுடும் வீரராகப் பணியாற்றியவர் என்று குற்றம் சாட்டியுள்ளது.இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் கடந்த ஒக்டோபரில் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, இஸ்ரேலிய இராணுவம் 1,007 பேரைக் கொன்றுள்ளதாக,காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பி.பி.சி




