மகளிர் டி20 உலகக் கிண்ண போட்டியில் நடப்புச் சம்பியன் நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்து 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இலங்கை அணி அரையிறுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது.
சௌதம்டனில் நேற்று முன்தினம் (16) நடைபெற்ற குழு இரண்டுக்கான இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் தீர்க்கமாக இருந்தது. இரு அணிகளுமே தமது முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் அரையிறுதி வாய்ப்பை தக்கவைப்பதற்கு கட்டாய வெற்றிக்காகவே களமிறங்கின. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணியின் வலுவான துடுப்பாட்ட வரிசையை இலங்கை பந்து வீச்சாளர்களால் ஆட்டங்காணச் செய்ய முடிந்தது. அந்த அணியின் முதல் விக்கெட் 4 ஓட்டங்களுக்கு இழந்ததோடு மத்திய வரிசை வீராங்கனைகளும் ஓட்டங்கள் பெற சிரமப்பட்டனர்
இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களையே பெற்றது. அணித் தலைவி மிலர் கெர் (45) மற்றும் சொபியா டிவைன் (45) ஆகியோர் கைகொடுத்தனர். கவிஷா டில்ஹாரி 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த இலங்கை 55 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது நிலக்ஷி சில்வா, கவிஷா டில்ஹாரியுடன் (17) இணைந்து 50 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து அவர் ஆறாவது விக்கெட்டுக்கு கௌஷினி நுத்யாங்கனாவுடன் சேர்ந்து இலங்கை அணியை வெற்றி வரை அழைத்துச் சென்றார்.
இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. நிலக்ஷி சில்வா 37 பந்துகளில் ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களைப் பெற்றதோடு மறுமுனையில் நுத்யாங்கனா ஆட்டமிழக்காது 24 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை மகளிர் அணி நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 உலகக் கிண்ணங்களில் இதுவரை 14 போட்டிகளில் ஆடியபோதும் அந்த அணியை வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும்.



