நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் எல்லாம் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் முதல்வராக இருப்பவர் அதையெல்லாம் படித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை – வானகரத்தில் நேற்று நடைபெற்ற முன்னாள் அமைச்சர் ஆர்க்காடு நா.வீராசாமியின் பேரனும், திமுக எம்.பி கலாநிதி வீராசாமியின் மகனுமான சித்தார்த் – ஆஷ்ரயா இணையரின் திருமணத்தை நடத்திவைத்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “1976இல் நாங்கள் எல்லாம் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறையில் இருந்த போது ஆர்க்காட்டார் எங்களோடு இருந்தார்கள். சிட்டிபாபு எந்த அளவுக்கு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார் என்பது உங்களுக்கு தெரியும். அவர் மறைவதற்கு என்ன காரணம் என்பதும் உங்களுக்குப் புரியும். அதைப்பற்றி எல்லாம் இந்த மணவிழா நிகழ்ச்சியில் நாம் பேச விரும்பவில்லை.
அப்படிப்பட்ட கொடுமைகள் எல்லாம் சென்னை சிறைச்சாலையில் நடைபெற்றது. இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், நான் சிறையில் நிம்மதியாக தெம்போடு திராணியோடு இருந்தேன் என்று சொன்னால், அதற்கு ஆர்க்காட்டார் காரணமாக இருந்தார் என்பதை நான் இந்த நேரத்தில் பெருமையோடு சொல்ல விரும்புகிறேன்.
இன்றைக்கும் என்னுடைய கையில் மிசா தழும்பு இருக்கிறது. அதேபோன்று ஆர்க்காட்டாருக்கு இன்றைக்கும் ஒரு காது கேட்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. சிறையில் பட்ட அந்தக் கொடுமையின் காரணத்தினால்தான் அந்த நிலைக்கு அவர் ஆளாக்கப்பட்டார். எனவேதான் “வைரம் பாய்ந்த ஒரு தொண்டன்” ஆர்க்காட்டார் என்று கருணாநிதி பலநேரங்களில் சொல்லியிருக்கிறார்.
ஒரு மாநிலக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு தேர்தல் தோல்விக்கே இன்றைக்குப் பல கட்சிகள் காணாமல் போயிருக்கின்றன. ஆனால் 75 ஆண்டு காலம் கொண்ட கொள்கைக்காக இலட்சியத்திற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் கட்சி; ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்களுக்காகப் பாடுபடும் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம். அந்தத் திராவிட முன்னேற்றக் கழகத்தில்தான் இன்றைக்கு எத்தனையோ பேர் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றார்.



