செக் குடியரசில் நடைபெற்ற ஒஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் தடகள போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் ருமேஷ் தரங்க 86.57 மீற்றர் தூரம் எறிந்து மீண்டும் ஒரு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
டயமன்ட் லீக்குக்கு அடுத்த நிலையில் உள்ள உலகத் தடகளப் போட்டியாக இருக்கும் இந்தத் தொடரின் உலகின் முன்னணி வீரர்களுடன் போட்டியிட்டே அவர் முதல் இடத்தைப் பிடித்தார். நேற்று முன்தினம் (16) நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் 85.57 மீற்றர் எறிந்த தரங்க, தனது இரண்டாவது முயற்சியில் அந்தத் தூரத்தை 86.30 ஆக அதிகரித்துக் கொண்டார். பின்னர் மூன்றாவது முயற்சியில் 86.57 மீற்றர் எறிந்து முதல் இடத்தை வென்றார்.
இதில் இரண்டு முறை உலக சம்பியன் பட்டம் வென்ற கிரேனடாவின் அன்டர்சன் பீட்டர் 84.27 மீற்றர் தூரம் எறிந்து இரண்டாம் இடத்தைப் பிடித்ததோடு தென்னாபிரிக்காவின் டோவ் ஸ்மித் 83.90 மீற்றர்களுடன் மூன்றாம் இடத்தை வென்றார்.
23 வயதாகும் ருமேஷ் தரங்க இந்த மாத அரம்பத்தில் ரோம் டயமன்ட் லீக் போட்டியில் 92.62 மீற்றர் தூரம் எறிந்து தேசிய மற்றும் போட்டிச் சாதனை படைத்ததோடு, ஈட்டி எறிதல் விளையாட்டில் 8ஆவது அதிக தூரத்தை எறிந்தார். இதனையடுத்து உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் அவரால் மூன்றாவது இடத்திற்கு முன்னேற முடிந்தது. இந்தப் பருவத்தில் உலகில் அதிக தூரம் எறிந்த முதல் நான்கு இடங்களையும் ருமேஷ் தரங்க பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ருமேஷ் தரங்க அடுத்து நாடு திரும்புவதற்கு முன்னர் டோஹா டயமன்ட் லீக் போட்டியில் பங்கேற்கவுள்ளார். இந்தப் போட்டி நாளை (19) நடைபெறவுள்ளது.



