யாழ்ப்பாணம் _ கண்டி பிரதான வீதியில் பூநேவ கல்கந்தேகம பகுதியில் (17) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக பூநேவ பொலிஸார் தெரிவித்தனர்.
நுரைச்சோலை பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்ற பட்டா ரக வாகனம் கல்கந்தேகம பகுதியி வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் பின்னால் உரம் ஏற்றிவந்த லொறி அதனுடன் மோதி கவிழ்ததனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் நுரைச்சோலை இலந்தடியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய வர்ணகுலசூரிய அன்டன் விராஜ் பெனாண்டோ மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 35 வயதுடைய ருமேஷ் பிரியங்கர ஆகிய இருவராவர்.
இலந்தடி பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் தனது பணியாளர்கள் குழுவுடன் யாழ்பாணப் பகுதியில் கடல் மட்டை பிடிக்கும் தொழிலுக்காகச் சென்று கொண்டிருந்தபோது, பூனேவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அவர்கள் பயணித்த லொறி பூனேவ பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால் இன்று அதிகாலை நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது பின்னால் வந்த உரம் ஏற்றிக்கொண்டு வந்த கொள்கலன் லொறியின் சாரதி கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தப்பட்டிருந்த லொறி மீது கவிழ்ந்து இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விபத்து நடந்தபோது நிறுத்தப்பட்டிருந்த லொறியில் எட்டு பேர் இருந்ததாகவும், கொள்கலன் பெட்டியுடன் கூடிய லொறி சிறிய லொறி மீது கவிழ்ந்ததில் அந்த இடத்திலேயே இருவர் உயிரிழந்ததாகவும், தலையில் பலத்த காயமடைந்த ஒருவர் விரைவாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மற்றவர்கள் லொறியில் சிக்கி உயிர் தப்பியிருந்த நிலையில் பெரும் முயற்சி எடுத்து மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எனினும் சிறிய லொறியில் வந்த வியாபாரியின் உயிர் தப்பியதற்கு அவர் பொலிஸ் அதிகாரிகளுக்கு தனது வாகன ஆவணங்களைக் காட்டச் சென்றதே காரணம் என கூறப்படுகிறது.
இந்த கோர விபத்தை ஏற்படுத்திய உரம் ஏற்றிய கொள்கலன் பெட்டியுடன் கூடிய லொறியின் சாரதிக்கு தூக்கம் வந்ததால் அந்த லொறி வீதியை விட்டு விலகி நிறுத்தப்பட்டிருந்த சிறிய லொறி மீது இந்த பெரிய லொறி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



