புலின்த பெரேரா மற்றும் ஆரம்ப வரிசை துடுப்பாட்ட வீரர்களின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் மேற்கிந்திய தீவுகள் வளர்ந்து வரும் அணிக்கு எதிரான இரண்டாவது நான்கு நாள் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸை ஆடி வரும் இலங்கை வளர்ந்து வரும் அணி வலுவான நிலையை பெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் இரண்டாவது நாளான நேற்று (16) தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை வளர்ந்து வரும் அணி சார்பில் ஆரம்ப வீரர்களான பெரேரா மற்றும் ரவிந்து ரசந்த ஆகியோர் 168 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
ரசந்த 60 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த நிலையில் இரண்டாவது விக்கெட்டுக்கு அசித்த வன்னிநாயக்கவுடன் ஜோடி சேர்ந்த பெரேரா 94 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார்.
இதன்போது புலின்த பெரேரா 188 பந்துகளில் 14 பௌண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 145 ஓட்டங்களைப் பெற்றார். அதேபோன்று அசித்த வன்னிநாயக்க 60 ஓட்டங்களைப் பெற்றார்.
இதன்படி இலங்கை வளர்ந்து வரும் அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது 97 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திர இழந்து 430 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. அஞ்சல பண்டார 48 ஓட்டங்களுடனும் ஷாருஜன் ஷன்முகநாதன் 33 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
முன்னதாக நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் வளர்ந்து வரும் அணி முதல் இன்னிங்ஸில் 231 ஓட்டங்களைப் பெற்றது. இதன்படி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது இலங்கை வளர்ந்து வரும் அணி ஆறு விக்கெட்டுகள் கைவசம் இருக்க முதல் இன்னிங்ஸில் 199 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.
இன்று போட்டியின் மூன்றாவது நாளாகும்.



