தனது கன்னி ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆடிய இடது கை சுழல் வீரர் அரபாத் மின்ஹாஸின் சாதனை பந்துவீச்சின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தனது 1000 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.
ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் (30) நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பெற்ற வெற்றி மூலம் பாக். அணி மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 1–0 என முன்னிலை பெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஆஸி. அணியை 44.1 ஓவர்களில் 200 ஓட்டங்களுக்கே சுருட்ட முடிந்தது. இதன்போது பாக். அணிக்காக தனது கன்னி ஒருநாள் போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக மின்ஹாஸ் பதிவானார். அவர் தனது 10 ஓவர்களுக்கும் 31 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் பதிலெடுத்தாடிய பாக். அணி 42.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இந்தப் போட்டியுடன் இந்தியா (1075) மற்றும் அவுஸ்திரேலிய (1020) அணிகளுக்கு அடுத்து ஆயிரம் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடிய முதல் அணியாக பாகிஸ்தான் பதிவானது.



