21 ஆம் நூற்றாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுடன் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஜக் கலிஸ் ஆகியோரை ‘கிரிக்கின்போ’ இணையதளத்தின்; முன்னாள் நட்சத்திர வீரர்களைக் கொண்ட நடுவர் குழாம் தேர்வு செய்துள்ளது.
இதில் சிறந்த பந்துவீச்சாளராக முரளிதரனும், சிறந்த துடுப்பாட்ட வீரராக டெண்டுல்கரும் சிறந்த சகலதுறை வீரராக கலிஸும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2000–2025 காலப் பகுதியில் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட்டில் வெளிப்படுத்திய திறமை அடிப்படையிலேயே இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 25 சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களையும் நடுவர் குழாம் தேர்வு செய்திருப்பதோடு அதில் இலங்கை வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தனவும் இடம்பெற்றுள்ளனர். இந்த நடுவர் குழாமில் வசீம் அக்ரம், கிரேக் செப்பல், அஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுடன் 2010 இல் ஓய்வு பெற்ற முரளிதன் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவராகவும் சாதனை படைத்துள்ளார்.



