பதுளை மாவட்டத்தில் சேதமடைந்த வீதிகளின் பணிகளை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்யுங்கள்

3 Min Read

‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதற்கும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் பதுளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (13) பிற்பகல் பதுளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

அனர்த்த நிலைமையினால் பதுளை மாவட்டத்தில் 26,517 குடும்பங்களைச் சேர்ந்த 90,667 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 77 தோட்ட வீடுகளும் 507 கிராமிய வீடுகளும் முழுமையாகச் சேதமடைந்துள்ளன. அதிக ஆபத்துள்ள வீடுகளாக 1,376 தோட்ட வீடுகளும் 1,474 கிராமிய வீடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி, பதுளை மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட வேண்டிய மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 3,434 ஆகும். அந்த மக்களை மீள்குடியேற்றும் செயல்முறை மற்றும் அதில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி இங்கு பிரதேச செயலகப் பிரிவுகளின் அடிப்படையில் தனித்தனியாகக் கேட்டறிந்தார்.

மீள்குடியேற்றத்திற்காக முன்மொழியப்பட்ட, தற்போது தனியார் நிறுவனங்களின் வசம் உள்ள அரச காணிகளை விரைவாக விடுவிப்பது குறித்து இங்கு விசேடமாக ஆராயப்பட்டதுடன், அக்காணிகளை வழங்குவது தொடர்பாக நிறுவனங்களுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டவுடன் வீட்டு நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மீள்குடியேற்ற செயல்முறையை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை இங்கு மேலும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அறிக்கைகள் மற்றும் திட்டங்களுக்கு அப்பால் சென்று, வீடுகளை இழந்த மக்களுக்கு ஒரு புதிய வீட்டின் உரிமை குறித்த நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மீள்குடியேற்றத்தின் போது வேறு காணிக்குச் செல்வது குறித்து தயக்கத்தில் இருப்பவர்களுக்கு அது தொடர்பில் முடிவெடுப்பதற்காக, அதிகபட்சமாக ஜூன் 15 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குமாறும் ஜனாதிபதி இங்கு அறிவுறுத்தினார்.

மேலும், பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குதலின் முன்னேற்றம், வாழ்வாதார இழப்புகளுக்கான இழப்பீடு வழங்குதல், சிறு மற்றும் நடுத்தர அளவிலான வணிகத் தலங்களுக்கான இழப்பீடுகள் வழங்குதல், வீட்டு வாடகை செலுத்துதல் மற்றும் உயிரிழப்புகளுக்கான இழப்பீடுகளை வழங்குதல் ஆகியவற்றின் முன்னேற்றங்கள் குறித்தும் ஜனாதிபதி தனித்தனியாகக் கேட்டறிந்தார்.

‘டிட்வா’ அனர்த்த நிலைமையினால் வயல் நிலங்கள் மற்றும் பயிர்ச் செய்கைக் நிலங்களில் தேங்கியுள்ள மணல் மற்றும் கற்களை அகற்றும் செயல்முறை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக ஒரு ஏக்கருக்கு ரூ. 25,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கும், விவசாய அமைப்புகளின் பங்களிப்புடன் அந்த வேலைத்திட்டத்தை செயல்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

‘டிட்வா’ சூறாவளியினால் சேதமடைந்த பதுளை மாவட்டத்தின் வீதி அபிவிருத்தி குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், சேதமடைந்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான 21 வீதிகளின் பணிகளை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

அதேபோல், மாகாண வீதி அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் மற்றும் நிதித் தேவைகள் குறித்துக் கேட்டறிந்த ஜனாதிபதி, அந்த அனைத்து வீதிகளுக்கும் தேவையான நிதி மதிப்பீடுகளைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தினார்.

‘டித்வா’ பேரழிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வரும் வேலைத்திட்டத்தில், பணத்தை ஒருபோதும் தடையாக கருத வேண்டாம் என்றும், ‘டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட அழிவிலிருந்து இந்த வருடத்திற்குள் மீண்டு, அடுத்த வருடத்திலிருந்து பதுளை மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கத் தயாராகுமாறும் ஜனாதிபதி இங்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர், ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கிட்ணன் செல்வராஜ், ரவீந்திர பண்டார, பதுளை மற்றும் பண்டாரவளை மாநகர சபைகளின் மேயர்கள், பிரதேச சபை தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ஊவா மாகாண பிரதம செயலாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதுளை மாவட்ட அரச அதிகாரிகள், சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *