அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை 13 ஆம் திகதி சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
சுமார் ஒரு தசாப்தத்தில் அமெரிக்க ஜனாதிபதியொருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும் என்று அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான உறவுகளில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக ட்ரம்பின் இந்த பயணம் அமையும் எனவும் அமெரிக்க தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ட்ரம்ப் சீனாவுக்கு வருகை தர உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.
இவ்விஜயத்தில் ஜனாதிபதி ட்ரம்ப்புடன் போயிங், சிட்டிகுரூப் மற்றும் குவால்காம் உள்ளிட்ட அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனங்கள் சிலவற்றின் உயரதிகாரிகளும் இணைந்து கொள்ளவுள்ளனர். இவர்கள் சீன நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி ட்ரம்ப் 2025 ஏப்ரலில், உலகம் முழுவதும் உள்ள நாடுகள் மீது கடுமையான இறக்குமதி வரிகளை விதித்தார்.
அந்தக் கொள்கையின் விளைவாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் பதிலுக்குப் பதில் வர்த்தகப் போர் என்ற நிலை உருவானது. இதில் இரு நாடுகளும் 100 வீதத்திற்கும் அதிகமான வரிகளை விதித்தன. இந்நிலையில் கடந்த ஒக்டோபரில் தென் கொரியாவுக்கு விஜயம் செய்த ட்ரம்ப் சீன ஜனாதிபதியை நேருக்கு நேர் சந்தித்தார். அதன் பிறகு வரிகள் இடைநிறுத்தப்பட்டமை தெரிந்ததே.



