டிஜிட்டல் முறையிலான காப்புறுதி அட்டைகள்

1 Min Read

வாகனங்களுக்கான காப்புறுதி அட்டைகளை டிஜிட்டல் முறையில் வழங்கும் புதிய நடைமுறை அறிமுகமாகியுள்ளது.

இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு, இலங்கை காப்புறுதிச் சங்கம்  மற்றும் காப்புறுதித் துறையுடன் இணைந்து மேற்கொண்ட தீர்மானத்தின்  அடிப்படையில், இத்திட்டம் நடைமுறையாகிறது. இதற்கு முன்னர், காகிதச் சான்றிதழ்களே வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மோட்டார் வாகனக் காப்புறுதியின் செல்லுபடியாகும் தன்மையை எளிதில் உறுதிப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன இலக்கத்தை உள்ளிடும்போது எழுத்துக்கள் அல்லது எண்களுக்கு இடையில்  இடைவெளி விடக்கூடாது. ஏதேனும் ஒரு மோட்டார் வாகனத்தின் இலக்கம் “ஸ்ரீ” எனக்  காணப்படும்போது, அந்த எழுத்தை “SRI” என ஆங்கில மொழியில் உள்ளீடு செய்யவும்  நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

காப்புறுதி நிறுவனங்களால் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை வழங்குவது  ஆரம்பிக்கப்பட்ட போதிலும், தற்காலிக காப்புறுதி ஆவணங்களை வழங்குவது  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

எதிர்காலத்தில் தற்காலிக காப்புறுதி ஆவணங்களை வழங்குவதை நிறுத்துவதற்கு  எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், அதுவரை தற்காலிக காப்புறுதி ஆவணங்கள்  முன்னரைப் போலவே செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே  01 ஆம் திகதி முதல் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகள் மாத்திரம்  வழங்கப்பட்டாலும், இதுவரையில் வழங்கப்பட்டுள்ள காப்புறுதி அட்டைகள்  அவற்றின் செல்லுபடியாகும் காலம் முடியும் வரை செல்லுபடியாகும். ஏதேனும் ஒரு சாரதியால் டிஜிட்டல் காப்பீட்டு அட்டையைச் சமர்ப்பிக்க முடியாத  சந்தர்ப்பத்தில், டிஜிட்டல் காப்புறுதி அட்டையின் அச்சிடப்பட்ட நிழற்படப்  பிரதியைச் சமர்ப்பிக்கும் போது, குறுகிய தொலைபேசி இலக்கத்தைப்  பயன்படுத்தியோ அல்லது குறுஞ்செய்திச் சேவை மூலமோ அந்தப் பாதுகாப்பின்  செல்லுபடியாகும் தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.2006 ஆம்  ஆண்டின் 19 ஆம் இலக்க மின்னணு கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் II ஆம்  அத்தியாயத்தின் 3 ஆம் பிரிவின்படி, இந்த டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை  ஏற்றுக்கொள்வது, அதன் தாக்கம் அல்லது செல்லுபடியாகும் தன்மையை இழக்கச்  செய்ய முடியாது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *