தமிழக அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தமிழக மக்கள் புதிய மாற்றம் வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த வெற்றியை வழங்கியிருக்கின்றனர்.
தேர்தலுக்கு முன்பாக நடிகர் விஜய் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து ஏனைய கட்சிகள் பரப்புரை செய்தபோதும், மக்கள் விஜயை வெற்றி பெற வைத்திருப்பதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். வாக்குக்குப் பணம், சாதி அரசியல் என்பவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, உண்மையான ஜனநாயக முறையில் விஜயை மக்கள் ஆதரித்துள்ளனர். இதன் மூலம் 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
விஜய் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள இலவசங்களை விட, அவர் மீது கொண்ட அன்பினாலேயே மக்கள் இந்த வெற்றியைத் தந்துள்ளனர். தங்கள் தொகுதி வேட்பாளர் யார் என்று தெரியாமலேயே, ‘விசில்’ சின்னம் மற்றும் ‘விஜய்’ என்ற அடையாளத்தின் அடிப்படையிலேயே தவெக வேட்பாளர்கள் பலரும் வெற்றி பெற்றுள்ளனர். “ரசிகர் கூட்டம் வாக்குகளாக மாறுமா?” என்ற கேள்விக்கு “மாறும்” என்று அவரது ரசிகர்கள் நிரூபித்துள்ளனர். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வேண்டும் என்று விரும்புகின்றனர்.
“திமுகவே மீண்டும் ஆட்சியமைக்கும்” என்று கணித்த கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகிவிட்டன. தமிழக வெற்றிக் கழகம் 10 தொகுதிகளில் வெற்றி பெறுவதே கடினம் என்று கூறப்பட்ட நிலையில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது இளைய தலைமுறையினரிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தையே காட்டுகிறது. விஜய் ரசிகர்களை ‘தற்குறிகள்’ என்று விமர்சித்தவர்களுக்கு இந்த வெற்றி ஒரு ‘ஆச்சரியக்குறி’யாக அமைந்துள்ளது. இது ஆளுங்கட்சியான திமுக மீதான வெறுப்பின் பிரதிபலிப்பாகவும் இருக்கலாம்.
இந்த வெறுப்பின் காரணமாகவே கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்வியுற்றுள்ளார். சென்னை ‘திமுகவின் கோட்டை’ என்று கூறப்பட்டு வந்த நிலையில், மக்கள் தவெகவிடம் அந்தக்கோட்டையை வழங்கியிருக்கின்றனர். முதலமைச்சராக இருந்து நல்லாட்சி தந்த ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டது குறித்துப் பலரும் வருத்தப்பட்டாலும், “ஏன் இந்தத் தோல்வி?” என்று திமுக சுயபரிசோதனை செய்துகொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும்.
இந்தத் தேர்தலில் முக்கிய கட்சிகளான திமுக 59 தொகுதிகளிலும், அதிமுக 47 தொகுதிகளிலும், தவெக 108 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சியமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால், யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்தது.
தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், வெற்றிக் கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்பதற்காக 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியினர் தாமாகவே முன்வந்து தவெகவுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ், தவெக பக்கம் சென்றதை “முதுகில் குத்திவிட்டார்கள்” என்று திமுகவினர் விமர்சித்தனர். தேர்தலுக்கு முன்பே தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் பலரும் விரும்பினர்; ஆனால், பத்தாண்டு கால கூட்டணி உடைந்துவிடக் கூடாது என்பதற்காக திமுக கூட்டணியில் நீடித்தனர். 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. “தவெகவுடன் கூட்டணி வைத்திருந்தால் அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம்” என்றும் காங்கிரசார் கூறி வருகின்றனர்.
அப்படிக் கூட்டணி அமைத்திருந்தால் அதில் இன்னொரு ஆபத்தும் இருந்திருக்கும். காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் ‘விசில்’ சின்னம் இல்லாததால் மக்கள் ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு வாக்களித்திருக்கக்கூடும்; அதன் மூலம் திமுக கூடுதல் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வாய்ப்பு அமைந்திருக்கும் என்றும் பேசப்படுகிறது.
தவெக (108) மற்றும் காங்கிரஸ் (5) என மொத்தம் 113 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தவெக தரப்பில் தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரிடம் கடிதம் வழங்கப்பட்டது. ஆனால், “118 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சியமைக்க அழைக்க முடியும்” என்று ஆளுநர் மறுத்துவிட்டார். மீண்டும் ஆதரவு தேடி இடதுசாரிக் கட்சிகளிடம் தவெக சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இரண்டு இடதுசாரிக் கட்சிகளும் தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதால், “கூட்டணியில் சேராமல் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக” ஒப்புக்கொண்டனர். மீண்டும் 117 பேரின் ஆதரவு இருப்பதாகக் கூறி தவெக தரப்பினர் ஆளுநரைச் சந்தித்தனர். இப்போதும் “118 பேரின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும்” என்று ஆளுநர் கறாராகக் கூறிவிட்டார்.
தவெக ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்ததால், 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், “தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது; எங்கள் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே முடிவெடுக்க முடியும்” என்று தெரிவித்து ஓரிரு நாட்கள் தனது அறிவிப்பை இழுத்தடித்தார்.
விசிக தொண்டர்களைப் பொறுத்தவரை, தவெகவுக்கு ஆதரவு வழங்குவதில் தொடக்கத்தில் கடும் அதிருப்தி நிலவியது. “தங்கள் கட்சியின் வெற்றியைப் பாதித்த தவெகவுக்கு எப்படி ஆதரவு தருவது?” என்ற கேள்வியை அவர்கள் முன்வைத்தனர். இருப்பினும், ஆட்சி அமைப்பதற்கான இழுபறி நீடித்த சூழலில், இறுதியில் விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகள் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முன்வந்தன. இதன் மூலம், விஜய்க்குத் தேவையான 118 இடங்களை விட கூடுதலாக 120 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உறுதி செய்யப்பட்டது.
“தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி” என்று முழங்கிய விஜய், இறுதியில் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவைப் பெற்றே அரியணையில் ஏறியுள்ளார். இதுவே “யதார்த்த அரசியல்” என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்தது. இன்றைய அரசியல் களம் என்பது தணலில் நடப்பதற்கு ஒப்பானது என்பதை உணர்ந்தே விஜய் தனது அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
மறுபுறம், காங்கிரஸ் கட்சி தனது பத்தாண்டு கால திமுக உறவை முறித்துக்கொண்டு, தவெக தலைமையிலான ஆட்சியில் அதிகாரப் பகிர்வு மற்றும் “ஆட்சியில் பங்கு” என்ற நிபந்தனையுடன் கைகோர்த்துள்ளது. இது தமிழக அரசியலில் ஒரு புதிய கூட்டணி சகாப்தத்திற்கு வித்திட்டுள்ளது.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை, தவெக, அவர்களிடம் எந்த ஆதரவையும் கோரவில்லை. பாஜகவின் நிழல் தன் மீது விழுந்துவிடக் கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருந்தார். இதற்கிடையில், அமமுக வேட்பாளர் ஆதரவு அளித்ததாக எழுந்த வதந்திகளை டி.டி.வி. தினகரன் திட்டவட்டமாக மறுத்ததோடு, தவெகவுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார்.
திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கப்போவதாக எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த திமுக, “நாங்கள் கண்ணியமான எதிர்க்கட்சியாகவே செயல்படுவோம்” என்று அறிவித்தது. அதேசமயம், தவெக அரசு தனது வாக்குறுதிகளான 2500 உரிமைத்தொகை உள்ளிட்டவற்றை எவ்வாறு நிறைவேற்றப்போகிறது என்பதை உற்று கவனிப்போம் என்றும் அழுத்தம் கொடுத்துள்ளது.
நேற்று (மே 10, 2026), சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் (விஜய்) பதவியேற்றுக்கொண்டார். தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் அவருக்குப் பதவிப்பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். ஆறு தசாப்த கால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒரு புதிய தலைமுறை அரசியலைத் தொடங்கியுள்ள விஜய்க்கு முன்னால் மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கின்றன.
வேலையில்லாத பட்டதாரி மாதம் ரூ 4000 உதவித்தொகை, இலவச எரிவாயு சிலிண்டர்கள் போன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றப் பெரும் நிதி தேவைப்படும் நிலையில், தவெக அரசு தனது பொருளாதாரத் திட்டங்களை எவ்வாறு கையாளப்போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. சினிமா கவர்ச்சியால் ஈர்க்கப்பட்ட ரசிகர்களுக்கு அப்பால், ஒரு சிறந்த நிர்வாகியாகத் தன்னை விஜய் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இல்லையெனில், மக்கள் வழங்கிய இந்த ஆதரவு விரைவில் அதிருப்தியாக மாறக்கூடும். விஜய்யின் இந்த நீண்ட அரசியல் பயணம் வெற்றியடைய வாழ்த்துகள்!



