தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்கும் நிகழ்வு நேற்று சென்னை நேரு உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. காலை 10 மணிக்குதான் நிகழ்வு தொடங்கியது என்றாலும் அதிகாலை முதலே நேரு உள்ளக விளையாட்டரங்கு சுற்றிலும் விழாக் கோலம் பூண்டிருந்தது.
தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான தவெக தொண்டர்கள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதலே குவியத் தொடங்கிவிட்டனர். அதிகாலை 7 மணியில் இருந்தே நேரு உள்ளக விளையாட்டரங்குக்கு வெளியே தொண்டர்கள் பலரும் தவெக கொடிகள் ஏந்தியவாறு உற்சாகமாகக் காணப்பட்டனர். 8.30 மணியளவில் இருந்தே விழா அரங்கினுள் பார்வையாளர்களும், பிரபலங்களும் அனுமதிக்கப்பட்டனர். அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் வரத் தொடங்கினர்.
விஜய்யின் பெற்றோரான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், விஜய்யின் உறவினர்கள் பலரும் விழா அரங்கிற்கு வருகை தந்தனர். தவெக நிர்வாகிகளாக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.நடிகை த்ரிஷா வெளிர் நீல நீற புடவையில் வந்திருந்தார். அவரை விஜய்யின் அம்மா ஷோபா கட்டியணைத்து வரவேற்றார். ஆர்ப்பரித்த ரசிகர்களை பார்த்து கையசைத்த த்ரிஷா பின்னர் தனக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் சென்று அமர்ந்தார்.
கூட்டணி கட்சித் தலைவர்களாக மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், விசிக சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதே போல பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், பாமக தலைவர் அன்புமணி, சட்டமன்ற உறுப்பினர் சவுமியா அன்புமணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தவெக தலைவர் விஜய் கோட், வெள்ளை நிற மேலங்கி அணிந்து வருகை தந்தார். வழக்கமாக இதுவரை தமிழகத்தில் பதவியேற்ற முதல்வர்கள் அனைவரும் வேட்டி அணிந்தே பதவியேற்று வந்த நிலையில், விஜய் அந்த வழக்கத்தை தவிர்த்துவிட்டு கோட் சூட் அணிந்து வந்தது கவனத்தை ஈர்த்தது. அவர் அரங்கினுள் நுழைந்ததும் உள்ளே அமர்ந்திருந்த தவெக தொண்டர்கள் அனைவரும் எழுந்து நின்று ஆராவாரம் செய்தனர். ‘டிவிகே’, ‘டிவிகே’ என்ற ஆர்ப்பரிப்பால் அரங்கமே அதிர்ந்தது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வந்தபோது விஜய் சென்று அவரை கட்டியணைத்து வரவேற்றார். இருவரும் ஒன்றாக மேடைக்கு வந்து அமர்ந்தனர். அருகில் அமைச்சராக பதவியேற்க இருந்த 9 எம்எல்ஏக்களும் அமர்ந்தனர். 9.50 மணியளவில் தமிழக பொறுப்பு ஆளுநர் அரங்கிற்கு வருகை தந்தார்.
சரியாக 10 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் ‘வந்தே மாதரம்’ பாடலும், அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட்டு, 3ஆவதாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இதனையடுத்து தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் அவருக்கு பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ‘ஜோசப் விஜய் எனும் நான்’ என்று தொடங்கி தனது உறுதிமொழியை முதல்வர் விஜய் எடுத்துக் கொண்டார்.
தொடர்ந்து ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
பின்னர் பதவியேற்ற கையோடு முதல்வர் விஜய், மூன்று முக்கிய அறிவிப்புகளுக்கான கோப்புகளில் மேடையிலேயே கையெழுத்திட்டார். தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய வாக்குறுதிகளான, வீடுகளில் 2 மாதங்கள் 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப் பொருள் தடுப்புப் படை திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் கையெழுத்திட்டார்.
முதல்வராக தனது முதல் உரையில் பேசிய விஜய், “சினிமாவில் ஒரு சாதாரண உதவி இயக்குநரின் மகன் தான் நான். எனக்கு வாழ்க்கையில் வறுமை, பசி என்றால் என்னவென்று தெரியும். நான் மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவன் அல்ல. நான் உங்கள் குடும்பத்தில் ஒருவன் தான். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால் தான், என்னை வெற்றி பெறவைத்துள்ளீர்கள” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
உணர்ச்சிபூர்வமாகத் தொடங்கிய விஜய் பின்னர் தனது வழக்கமான பாணிக்கு மாறி அதிரடியாக பேசினார். “மக்கள் பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட எடுக்க மாட்டேன். எனக்கு அந்த அவசியம் இல்லை. அதுபோல நான் யாரையும் தப்பு செய்யவும் விட மாட்டேன்.
எனது அரசில் யாரும் தவறு செய்ய விடமாட்டேன். ஜெயித்துவிட்டோம் என ஒரு ஆட்டம் ஆடிப்பார்க்கலாம் என்ற என்ணம் இருந்தால், அதனை உடனே மறந்துவிடுங்கள்” என்று ஆவேசமாக தெரிவித்தார்.

விஜய்யுடன் பதவியேற்ற 9 தவெக அமைச்சர்கள் யார்?
தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றார். அவருடன் ஒன்பது பேர் கொண்ட சிறிய அமைச்சரவையும் பதவியேற்றுள்ளது. இது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமையிலான முதல் அரசாங்கத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அரசியல் அனுபவம், இளைஞர் பிரதிநிதித்துவம், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சாதி சமன்பாடுகளைச் சமநிலைப்படுத்தும் வகையில் இந்த அமைச்சரவையை விஜய் அமைத்துள்ளார்.
அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முக்கிய முகங்கள்:
கே.ஏ. செங்கோட்டையன்: அதிமுகவின் மூத்த தலைவரான இவர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதிமுக தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் நீக்கப்பட்ட இவரை, தனது அரசாங்கத்திற்கு நிர்வாக அனுபவத்தைச் சேர்க்கும் வகையில் விஜய் அமைச்சரவையில் இணைத்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனா: விஜய்யின் நம்பிக்கைக்குரிய வியூகவாதியாகக் கருதப்படும் இவர், சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றார். தொழிலதிபர் சந்தியாகோ மார்ட்டினின் மருமகனான இவர், கட்சியின் கட்டமைப்புத் திட்டங்களில் முக்கிய பங்கு வகித்தவர்.
நிர்மல் குமார்: மதுரையின் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்றவர். முன்னாள் பாஜக நிர்வாகியான இவர், தற்போது தெற்கு தமிழகத்தில் தவெகவின் முக்கிய முகமாக உருவெடுத்துள்ளார்.
ஆனந்த்: தவெக பொதுச்செயலாளரான இவர் சென்னை தியாகராய நகர் (T.Nagar) தொகுதியில் வெற்றி பெற்றார். கட்சியின் அடிமட்ட கட்டமைப்பை வலுப்படுத்தியவர்.
ராஜ் மோகன்: தனது பேச்சாற்றலால் பிரபலமான திரை மற்றும் தொலைக்காட்சி பிரபலம்.
டாக்டர் டி.கே. பிரபு: காரைக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற பல் மருத்துவர்.
அருண் ராஜ்: தனது ஐஆர்எஸ் (IRS) பணியைத் துறந்து தவெகவில் இணைந்த மருத்துவர். திருச்செங்கோடு தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சரவையில் நுழைந்துள்ளார். பி. வெங்கடரமணன்: மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏவான இவர், அரசாங்கத்தின் முக்கியப் பிராமண முகமாகக் கருதப்படுகிறார்.
எஸ். கீர்த்தனா: விருதுநகர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற இவர், அமைச்சரவையின் மிக இளைய முகமாவார்.

திருச்சி கிழக்கில் சி. ஜோசப் விஜய் இராஜிநாமா!
திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை சி. ஜோசப் விஜய் இராஜிநாமா செய்தார்.
சட்டப்பேரவை முதன்மைச் செயலர் சீனிவாசனிடம் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கடரமணன் ஆகியோர் சந்தித்து இராஜிநாமா கடிதத்தை வழங்கினர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றிருந்த நிலையில், ஒரு தொகுதியில் இராஜிநாமா செய்தார்.
தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக கருப்பையா
தமிழக சட்டப்பேரவை தற்காலிக தலைவராக கருப்பையா நேற்று (மே 10) பதவியேற்றுக்கொண்டார்.
சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருப்பையா தற்காலிக சட்டப்பேரவை தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆளுநர் அர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழகத்தின் 13 ஆவது சட்டப்பேரவை இன்று கூடவுள்ள நிலையில், தற்காலிக பேரவைத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். தவெக ஆட்சியில் இடம்பெற்றுள்ள எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவியேற்கவுள்ளனர்.
விஜய்யின் பதவியேற்பு விழாவை புறக்கணித்த மனைவி, பிள்ளைகள்
தமிழக முதலமைச்சராக நடிகர் விஜய் பதவியேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கலந்து கொள்ளாதது ஞாயிற்றுக்கிழமை சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்தத் தருணம் “முழுமையடையாதது போல் உணர்வதாக” அவரது இரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

“தளபதி” என்று மக்களால் அழைக்கப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், சென்னையில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த நிகழ்வில் அவரது பெற்றோர்களான ஷோபா சந்திரசேகர் மற்றும் எஸ்.ஏ. சந்திரசேகர், நெருங்கிய நண்பர்கள், கட்சித் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு அவரை உற்சாகப்படுத்தினர்.
விஜய்யுடன் நீண்டகாலமாகக் காதல் வதந்திகளில் சிக்கி வரும் நடிகை திரிஷா கிருஷ்ணனும் இந்த விழாவில் கலந்து கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இருப்பினும், விஜய்யின் மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் மற்றும் அவர்களது பிள்ளைகளான ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா ஆகியோரின் வருகை இல்லாததே சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது.




