லிபியாவின் ஸாவியா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நேற்று முதல் மீண்டும் முழுமையாகச் செயல்பட ஆரம்பித்துள்ளது.
திரிபோலிக்கு மேற்கே 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இந்நிலையத்திற்கு அருகில் கடந்த இரண்டு நாட்களாக மோதல் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மூடப்பட்ட லிபியாவின் மிகப்பெரிய, செயல்படும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான இந்நிலையம் நேற்று முதல் மீண்டும் முழுமையாகச் செயல்படத் தொடங்கியுள்ளது என்று அந்நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஸாவியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகில் சண்டை வெடித்ததைத் தொடர்ந்து அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்கள் இந்த ஆலை மூடப்பட்டிருந்தமை தெரிந்ததே.
இந்த சுத்திகரிப்பு ஆலையின் கொள்ளளவு ஒரு நாளைக்கு 120,000 பீப்பாய்கள் ஆகும். இது ஒரு நாளைக்கு 300,000 பீப்பாய்கள் கொள்ளளவு கொண்ட ஷராரா எண்ணெய் வயலுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இம்மோதலின் போது, ஆலைக்குள் பல இடங்களில் கடுமையான ஷெல் தாக்குதல்கள் நடந்ததால், ஆலையை முழுமையாக மூடவும், துறைமுகத்தில் இருந்த அனைத்து டேங்கர்களையும் வெளியேற்றவும் வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



