தூரப் பிரதேச பஸ் ஆசன முன்பதிவு: இனி ரூ. 30 மட்டுமே!

1 Min Read

தூரப் பிரதேசங்களுக்கு செல்லும் பயணிகள் இனி இணையவழியில் ஆசனங்களை முன்பதிவு செய்வதற்கு ரூ. 30 கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இணையவழி ஆசன முன்பதிவு முறை தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தூரப்பிரதேசங்களுக்கு செல்லும் பயணிகள் தற்போது இணையவழியில் தமக்கான ஆசனங்களை முன்பதிவு செய்யும் வசதிகளைப் பெற்றுள்ளனர். இதை நாம் தனியார் பஸ்கள் மூலம் ஒரு முன்னோட்டத் திட்டமாக. ஆரம்பித்துள்ளோம். இது, குறித்த பயணிகள் தங்களுக்கான பஸ் உள்ளதா என்பதைச் சரிபார்த்து, அதற்கேற்ப பஸ் நிலையத்திற்கு வருவதற்கு உதவியாக அமையும். அவர்கள் அவசரப்பட்டு பஸ் நிலையத்துக்கு வரவேண்டிய அவசியம் இல்லை.

ஆசன முன்பதிவு செயற்பாட்டின் போது நிலவிய சிக்கல்களுக்கு இது தீர்வாக அமைகிறது. சில சமயங்களில், முன்பதிவு செய்யப்பட்ட ஆசனங்களை இழப்பது மட்டுமல்லாமல், ஆசனங்களை முன்பதிவு செய்வதற்கு அதிக தொகையைச் செலுத்த வேண்டிய நிலையே காணப்பட்டது.

சில சமயங்களில், ரூ. 200 முதல் 300 வரை ஆசன முன்பதிவுக் கட்டணம் அறவிடப்பட்டு வந்துள்ளது.

புதிய முறையின் மூலம் ரூ. 30 என்ற மிகக் குறைந்த ஆசன முன்பதிவுக் கட்டணம் மட்டுமே தேவைப்படும் என்றும் இந்த முறை பஸ் உரிமையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் வசதியாக மற்றும் பயனுள்ளதாக அமையும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இணையவழி மூலம் ஆசன முன்பதிவை 3 வழிகளில் மேற்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கையடக்கத் தொலைபேசி அல்லது இணைய வழியாக www.busticket.gov.lk என்ற இணையதளத்துடன் இணைவதன் மூலமாகவோ, 011-200 1266 என்ற ஹொட்லைன் இலக்கத்துடன் அழைப்பை ஏற்படுத்துவதன் மூலமாகவோ, மாக்கும்புர பல்முனைப் போக்குவரத்து மையத்தில் நிறுவப்பட்டுள்ள கியோஸ்க் இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலமாகவோ இந்த ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *