சமரி அத்தபத்துவின் சகலதுறை ஆட்டத்தின் மூலம் பங்களாதேஷுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியிலும் 3 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை மகளிர் அணி மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரை 3–0 என முழுமையாக கைப்பற்றியது.
சில்ஹட்டில் நேற்று முன்தினம் (02) நடைபெற்ற இந்தப் போட்டி மழையால் இரண்டு மணி நேரம் தாமதித்த நிலையில் ஆட்டம் 9 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை மகளிர்கள் சார்பில் ஆரம்ப வீராங்கனையாக வந்த சமரி 27 பந்துகளில் 5 பௌண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 41 ஓட்டங்களை விளாசினார். இதன்மூலம் இலங்கை அணி 9 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 87 ஓட்டங்களை பெற்றது.
பதிலெடுத்தாட வந்த பங்களாதேஷ் அணிக்கு சமரி பந்துவீச்சிலும் நெருக்கடி கொடுத்தார். குறிப்பாக பங்களாதேஷ் மகளிர்கள் கடைசி ஓவருக்கு 14 ஓட்டங்களை பெறவேண்டி இருந்தபோதும் பந்துவீசிய சமரி அத்தபத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி 10 ஓட்டங்களையே விட்டுக்கொடுத்தார்.
இதனால் பங்களாதேஷ் அணி 9 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 84 ஓட்டங்களையே பெற்றது. சமரி அத்தபத்து 2 ஓவர்களுக்கு 15 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு சுகந்தி குமாரியும் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
பங்களாதேஷ் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணி ஏற்கனவே ஒருநாள் தொடரை 2–1 என வென்ற நிலையிலேயே டி20 தொடரையும் முழுமையாக கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



