ஜெட் எரிபொருள் குறித்து அவுஸ்திரேலிய நிறுவனங்களுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த சீன அரசாங்கத்திற்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய போர் உலகளாவிய எண்ணெய் சந்தையைத் தொடர்ந்து சீர்குலைத்து வருவதால், எரிபொருள் விநியோகத்தை வலுப்படுத்தும் நோக்கில் தனது பிராந்திய சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ள செனட்டர் வோங், நேற்று முன்தினமிரவு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்தே அவர் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேற்காசிய போரினைத் தொடர்ந்து ஜெட் எரிபொருள் உள்ளிட்ட சில எரிபொருளின் ஏற்றுமதியை சீனா கட்டுப்படுத்தியது. அதனால் அவுஸ்திரேலியா ஜெட் எரிபொருளுக்கு நெருக்கடியை எதிர்கொள்ளும் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளது.



