மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும், கடந்த ஆண்டில் மின்சார சபை நட்டமடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள வருடாந்த பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த 2025ஆம் ஆண்டு இறுதியில் மின்சார சபையின் மொத்த நட்டம் ரூ. 38.7 பில்லியனாகப் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் பலமுறை மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும் கட்டணங்கள் மேலும் 20 வீதத்தால் குறைக்கப்பட்டன.
இக்கட்டணக் குறைப்பு மற்றும் ஆண்டின் முதல் காலாண்டில் நிலவிய வறட்சியான காலநிலை காரணமாக வெப்ப மின் உற்பத்தி அதிகரித்தமை போன்றவற்றால் ஏற்பட்ட உற்பத்திச் செலவு உயர்வு, மின்சார சபையின் நிதிச் செயல்பாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிதி இழப்பை ஈடுசெய்யும் நோக்கில், 2025 ஜூன் மாதம் மின்சாரக் கட்டணங்கள் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்ட போதிலும், அது நட்டத்தை ஈடுசெய்யப் போதுமானதாக அமையவில்லை என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இதன் விளைவாக, 2024 ஆம் ஆண்டு இறுதியில் ரூ. 174.3 பில்லியனாக இருந்த மின்சார சபையின் குறுகிய காலக் கடன்கள் மற்றும் பொறுப்புகள், 2025ஆம் ஆண்டு இறுதியில் ரூ. 206.2 பில்லியனாக அதிகரித்துள்ளன. அதே காலப்பகுதியில் நீண்ட காலப் பொறுப்புகள் ரூ. 409 பில்லியனிலிருந்து ரூ. 411.2 பில்லியனாக உயர்ந்துள்ளன.



