தேசிய ஒலிம்பிக் குழுவின் அடுத்த நிர்வாகிகளை தேர்வு செய்யும் தீர்க்கமான தேர்தல் நாளை (25) நடைபெறவுள்ளது. ஒலிம்பிக் இல்லத்தில் மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ள பொதுக் குழு கூட்டத்தின்போது இந்த வாக்கெடுப்பு நடைபெறும்.
தேசிய ஒலிம்பிக் குழுவில் அண்மையில் இடம்பெற்ற சர்ச்சைகள் அதேபோன்று சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் ஆசிய ஒலிம்பிக் கௌன்சிலின் அழுத்தத்திற்கு மத்தியிலேயே இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. குறிப்பாக நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் பொதுச் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வாவுக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட பின்னர் இடம்பெறும் முதல் தேர்தல் இதுவாகும்.
இதில் தலைமை போட்டிக்கு ஆரம்பத்தில் ஐவர் இடம்பெற்றபோதும் கடைசி நேரத்தில் இருவர் விலகுவதற்கு திட்டமிட்டிருக்கும் நிலையில் மூவருக்கு இடையே போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கீ மற்றும் ஸ்னோபோட் சம்மேளனத்தின் தலைவர் தேவா ஹென்றி மற்றும் கெனொய்ன் மற்றும் காயகின் சங்கத்தின் உறுப்பினர் ரொஹான் பிரீதி விராஜ் பெரேரா ஆகிய இருவருமே தலைமைப் பதவிக்கான போட்டியில் இருந்து விலக திட்டமிட்டுள்ளனர்.
இதனால் மூவர் இடையிலேயே போட்டி நிலவுகிறது. இலங்கை கால்பந்து சம்மேளன தலைவர் ஜஸ்வர் உமர், தேசிய ஒலிம்பிக் குழுவின் தற்போதைய உப தலைவர் மற்றும் இலங்கை தேசிய துப்பாக்கிச் சுடுதல் சம்மேளனத்தின் உப தலைவர் ஷிரன்த பீரிஸ் மற்றும் பேஸ்போல் சங்கத்தின் தலைவர் அசங்க செனவிரத்ன ஆகியோரே போட்டியில் உள்ளனர். தேசிய ஒலிம்பிக் குழு வரலாற்றில் அதிகபட்சம் இருவரே தலைமைப் பதவிக்கு போட்டியிட்டிருக்கும் நிலையில் இம்முறை தேர்தலில் தலைமைப் பதவிக்கு ஐவர் வேட்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கதாகும். தேசிய ஒலிம்பிக் குழுவின் 11 பதவிகளுக்காக தேர்தல் நடத்தப்படுவதோடு, அதற்காக 33 வேட்புமனுக்களை தேர்தல் குழு ஏற்றுள்ளது.
எட்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக தலைமைப் பதவியில் இருந்த, தற்போதைய ஒலிம்பிக் குழு தலைசர் சுரேஷ் சுப்ரமணியம் திருத்தப்பட்ட விளையாட்டுச் சட்டத்திற்கு அமைய மீண்டும் போட்டியிடவில்லை. இதனை அடுத்து தலைமைப் பதவிக்கு பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. 22 ஆண்டுகள் ஒலிம்பிக் குழு தலைமை பதவியை வகித்த ஹேமசிறி பெர்னாண்டோ போட்டி இன்றி அந்தப் பதவியில் நீடித்தார், அதன் பின்னர் இடம்பெற்ற இரு தேர்தல்களிலும் தலைமைப் பதவிக்கு இருவருக்கு இடையிலேயே போட்டி இருந்தது.
இம்முறை ஒலிம்பிக் குழுவின் செயலாளர் பதவிக்கு இலங்கை நீச்சல் சங்கத்தில் இருந்து பௌமி மொஹமட் ரிப்தி மற்றும் நிஷாந்த பிரியசேன ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேசிய ஒலிம்பிக் குழுவில் பதிவு செய்யப்பட்ட 32 சங்கங்கள் இருந்தபோதும் ஜிம்னாஸ்டிக், டேபிள் டென்னிஸ், பொக்சின் மற்றும் கால்பந்து சங்கங்களில் நீடிக்கும் பிரச்சினைக்கு மத்தியில் அங்கீகரிக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 28 இற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் சிரேஷ்ட நடுவர் கே.டீ. சித்ரசிறி உட்பட தேர்தல் குழு தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு, அந்தக் குழுவின் மற்ற உறுப்பினர்களாக ஹர்ஷ அமரசேன மற்றும் பியசேன ரணசிங்க ஆகியோர் செயற்படுகின்றனர்.



