வடக்கு காசாவில் பொதுமக்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது மூன்று சிறுவர்கள் உட்பட ஐந்து பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
வடக்கு காசாவின் பெய்ட் லஹியாவில் உள்ள அல்-கஸ்ஸாம் மசூதிக்கு அருகே பொதுமக்களைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. அத்தாக்குதலிலேயே இவர் கொல்லப்பட்டதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கையில் அதனை மீறும் வகையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள காசா அரசாங்க ஊடக அலுவலகம் கடந்தாண்டு இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் எட்டப்பட்டதோடு ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் அது நடைமுறைக்கு வந்தது. அந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 2,400 முறை மீறியுள்ளது. இந்த யுத்த நிறுத்த மீறல்களில், குடியிருப்பாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள், கைதுகள், முற்றுகைகள் மற்றும் கட்டாயப் பட்டினி ஆகியனவும் அடங்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சேவ் தி சில்ட்ரன்’ விடுத்துள்ள அறிக்கையின்படி, காசாவில் முன்னெடுக்கப்பட்ட இரு வருட கால போரில், 20,000 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சராசரியாக, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது ஒரு சிறுவராவது கொல்லப்படுவதாகவும், அவர்களில் 1,000 இற்கும் மேற்பட்டவர்கள் ஒரு வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவித்தது.



