அமெரிக்கா, பிரித்தானியா முதலான உலக நாடுகள் சில புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.
இந்நிலையில், ஒரு நாடு, புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
நாடொன்று எடுத்துள்ள நல்ல நடவடிக்கை
ஆம், ஸ்பெயின் அரசு, அந்நாட்டில் வாழும் 500,000 ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருக்கு சட்டப்படி வாழ அனுமதி வழங்கியுள்ளது.

செவ்வாயன்று, ஸ்பெயின் அமைச்சர்கள் கவுன்சில், நாட்டில் வாழும் 500,000 ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருக்கு, சட்டப்படி வாழ அனுமதி வழங்கும் அரசாணை ஒன்றை அங்கீகரித்துள்ளது.
ஸ்பெயின் அரசு நிறைவேற்றியுள்ள அரசாணையின்படி, 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து ஐந்து மாதங்களுக்கு முன் ஸ்பெயின் நாட்டுக்கு வந்து அங்கு வாழ்ந்துவரும் புலம்பெயர்ந்தோர், சில நிபந்தனைகளின் கீழ் ஸ்பெயின் நாட்டில் சட்டப்படி வாழலாம்.
500,000 ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த செய்தி குறித்து சமூக ஊடகமான எக்ஸில் இடுகை ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்பெயின் நாட்டின் பிரதமரான Pedro Sánchez, விவசாயம், முதியோர், நோயாளிகளை கவனித்துக்கொள்ளுதல் ஆகிய விடயங்கள் மூலம் நம் அன்றாட வாழ்விற்கு பங்களிக்கும் மக்களுக்கு ஒரு அங்கீகாரத்தை வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இவர்கள், நாம் வாழும் செல்வச்செழிப்பு மிக்க இந்த ஸ்பெயின் நாட்டைக் கட்டி எழுப்பியவர்கள் என்றும் கூறியுள்ள பிரதமர், அரசின் இந்த நடவடிக்கையால் ஆவணங்களற்ற பணியாளர்கள் நாட்டுடன் ஒருங்கிணைந்து வாழவும் வழி கிடைக்கும், நாட்டின் பொருளாதாரம் மேம்படவும் அது உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.




