தாய்லாந்தின் பாங்கொக் நகரில் நடைபெற்றுவரும் ஆடவர் ஹொக்கி தகுதிகாண் போட்டியில் பி குழுவில் முதலிடம் பெற்ற இலங்கை ஹொக்கி அணி இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜப்பானின் நகோயாவில் நடைபெறு ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
பங்களாதேஷ் ஹொக்கி அணியை 20 ஆண்டுகளின் பின் 3–2 என்ற கோல் கணக்கிலும் உஸ்பகிஸ்தான் அணியை 10 ஆண்டுகளின் பின் 3–1 என்ற கோல் கணக்கிலும் தோற்கடித்து தகுதி காண் சுற்றில் இலங்கை அணி முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்டது. ஆரம்பச் சுற்றின் இறுதிப் போட்டியில் சீன தைபேவிடம் 1–3 என தோல்வியுற்றபோதும் இலங்கை அணியால் பி குழுவில் முதலிடத்தை தக்கவைக்க முடிந்தது.

இதில் 2006 இல் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் பங்களாதேஷை 2–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பின்னர் அந்த அணியை தோற்கடிப்பது இது முதல்முறையாக இருந்தது.
இலங்கை ஹொக்கி அணிக்கு இலங்கை இராணுவ ஹொக்கி வீரர் தம்மிக்க ரணசிங்க தலைமை வகிப்பதோடு, முன்னாள் தேசிய அணி வீரர் ரிபாஸ் மொஹமட் இலங்கை ஹொக்கி அணியின் பயிற்சியாளராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




