ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நாளை (11) ஆரம்பமாகவிருக்கும் நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் உக்கிர தாக்குதல்கள் ஒட்டுமொத்த போர் நிறுத்த முயற்சிகளையும் சீர்குலைக்கும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட இரண்டு வார போர் நிறுத்தத்தில் லெபனானும் உள்ளடங்குவதாக ஈரான் கூறியபோதும் அமெரிக்க தரப்பு அதனை நிராகரித்து வருகிறது. இது போர் நிறுத்த மீறல் என்று குற்றம்சாட்டும் ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் கட்டுப்பாட்டை இறுக்கியுள்ளது.

போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த கடந்த புதனன்று லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய உக்கிர தாக்குதல்களில் 250 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். லெபனான் மீது இஸ்ரேல் கடந்த மார்ச் 2 ஆம் திகதி தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் அதிக உயிரிழப்பு இடம்பெற்ற தினமாக இது பதிவானது.
போர் ஆரம்பித்ததில் இருந்து ஹிஸ்புல்லாவுக்கு ஏற்பட்ட ‘மிகப்பெரிய பின்னடைவு’ என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தத் தாக்குதல்களை விபரித்தார்.
மேலும், ‘தேவைப்பட்டால், ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மீண்டும் போரை ஆரம்பிக்கும்’ என்றும் அவர் கூறினார்.
அதே நேரத்தில், லெபனான் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால், எதிரிகள் ‘வருந்தும்’ வகையிலான பதிலை அளிக்கப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது.
போர் நிறுத்தத்தில் லெபனானும் இணைக்கப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் நெருங்கிய கூட்டணி நாடுகளான பிரிட்டன் மற்றும் பிரான்ஸும் குறிப்பிட்டிருப்பதோடு இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டித்துள்ளது. எவ்வாறாயினும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்ததோடு இஸ்ரேலிய தரைவழி படையும் அங்கு முன்னேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆறு வாரங்களில், லெபனானில் நடந்து வரும் போரில் 130 குழந்தைகள் உட்பட சுமார் 1,500 பேர் கொல்லப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தப் போரின் முதல் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக ஈரானிய பிரதிநிதிகள் நேற்று சென்றடைந்ததோடு அவர்கள் எதிர்வரும் சனிக்கிழமை அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளனர்.
எவ்வாறாயினும் சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் தீர்க்கமாக இருக்கும் ஹோர்மூஸ் நீரிணை மீதான முடக்கத்தை ஈரான் கைவிடுவதற்காக எந்த ஒரு சமிக்ஞையையும் வெளியிடவில்லை. லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை தொடரும் வரை எந்த உடன்படிக்கையும் இல்லை என்று ஈரான் கூறுகிறது.
ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டிருப்பது சர்வதேச எரிபொருள் விநியோத்தில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஐரோப்பிய மற்றும் ஆசிய சந்தையில் எண்ணெய் பெரும் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாரசீக வளைகுடாவிற்குச் செல்லும் மிக முக்கியமான கடல்வழிப் பாதையாகவும், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கு அவசியமானதாகவும் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து நடைபெறுவது இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கியப் புள்ளியாக இருக்கும்.
தனது அனுமதியின்றி எந்தவொரு கப்பலாவது இந்த வழியாகச் சென்றால், அது ‘குறிவைக்கப்பட்டு அழிக்கப்படும்’ என்று ஈரான் கூறியுள்ளது.
இதற்கிடையில், 10 அம்ச போர்நிறுத்த முன்மொழிவின் மூன்று நிபந்தனைகள் ஏற்கனவே ‘வெளிப்படையாக மீறப்பட்டுள்ளதாக’ ஈரானிய பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இத்தகைய ஒப்பந்தங்களில் சில ‘குழப்பங்கள்’ ஏற்படுவது இயல்பானது என்று ஜே.டி. வான்ஸ் ஒப்புக்கொண்டார்.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறுகையில், ‘ஈரான்–அமெரிக்க போர்நிறுத்த நிபந்தனைகள் தெளிவானவை மற்றும் சந்தேகத்திற்கு இடமற்றவை. இப்போது அமெரிக்கா தான் தீர்மானிக்க வேண்டும், ஒன்று போர்நிறுத்தம், அல்லது இஸ்ரேல் மூலம் போரைத் தொடர்வது. இவை இரண்டும் ஒரே நேரத்தில் நடக்க முடியாது. லெபனானில் அரங்கேறும் படுகொலைகளை உலகம் கவனித்துக் கொண்டிருக்கிறது. இப்போது முடிவு அமெரிக்காவின் வசம் உள்ளது, மேலும் அது தனது வாக்குறுதிகளையும் கடமைகளையும் நிறைவேற்றுகிறதா என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த உலகமும் காத்துக் கொண்டிருக்கிறது’ என்றார்.
உண்மையான ஒப்பந்தம் முழுமையாக பின்பற்றப்படும் வரை அமெரிக்கப் படைகள் அங்கு இருக்கும் என ஈரானைக் குறிப்பிட்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சோசியல் பதிவில், ‘உண்மையான ஒப்பந்தம் முழுவதும் பின்பற்றப்படவில்லை என்றால் இதற்கு முன்னர் யாரும் பார்த்திராத பெரிய, சிறந்த மற்றும் வலுவான தாக்குதல் தொடங்கும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அந்தப் பதிவில், ‘உண்மையான ஒப்பந்தம் முழுவதுமாக பின்பற்றப்படும் வரை ஏற்கனவே முழுவதுமாக பாழடைந்த எதிரியின் (ஈரான்) அழிவுக்குத் தேவையான அனைத்து அமெரிக்க கப்பல்கள், விமானங்கள், இராணுவ வீரர்கள் கூடுதல் வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் உடன் ஈரானைச் சுற்றி இருப்பார்கள். எந்தக் காரணத்திற்காகவும் அவ்வாறு நடக்கவில்லையென்றால், அதற்கான சாத்தியம் குறைவு தான் என்றாலும், இதற்கு முன்பு யாரும் பார்த்திராத பெரிய, சிறந்த மற்றும் வலுவான தாக்குதல் ஆரம்பிக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் லெபனானின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களும், அதன் விளைவாக ஏற்படும் உயிரிழப்புகளும் அழிவுகளும் இந்த பலவீனமான போர்நிறுத்தத்தைச் சிக்கலுக்குள்ளாக்குவதாக உள்ளது.




