இலங்கையின் 400 மீற்றர் அஞ்சலோட்ட ஆடவர் அணி எதிர்வரும் மே 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் பொட்ஸ்வானாவின் கபொரோன் நகரில் நடைபெறும் உலக அஞ்சலோட்ட சம்பியன்சிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்தியாவின் சந்திகார் நகரில் கடந்த மாதம் நடைபெற்ற அழைப்பு அஞ்சலோட்ட சம்பியன்சிப் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி 3:02.16 நிமிடங்களில் போட்டியை நிறைவு செய்ததை அடுத்தே இந்த வாய்ப்புப் பெற்றுள்ளது. இதன்போதும் இலங்கை சர்வதேச தரப்படுத்தல் பட்டியலில் 20 ஆவது இடத்திற்கு முன்னேற முடிந்துள்ளது.

இலங்கை அஞ்சலோட்ட குழாத்தில் அருன தர்ஷன, பசிந்து கொடிகார, கல்ஹார இதுப மற்றும் சதேவ் ராஜபக்ஷ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இலங்கையின் இரண்டாவது சிறந்த வேகத்தை பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் உலக அஞ்சலோட்ட சம்பியன்சிப் போட்டியின் ஆடவர்களுக்கான 400 மீற்றர் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் 24 அணிகளிலேயே இலங்கையும் இடம்பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் முதல் 12 இடங்களை பிடிக்கும் அணிகள் 2027 இல் நடைபெறும் உலக தடகள சம்பியன்சிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.




