லண்டனில் நான்கு யூத ஆம்புலன்ஸ் வாகனங்கள் முகமூடி அணிந்த நபர்களால் தீவைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவர் கைது
திங்களன்று விடிகாலையில் தீக்கிரையாக்கப்பட்ட அந்த நான்கு ஆம்புலன்ஸ் வாகனங்களும் Hatzola எனும் தன்னார்வ அவசர சேவை அமைப்புக்கு சொந்தமானதாகும்.

இந்த நிலையில், பயங்கரவாத தடுப்பு அதிகாரிகளால் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதை அடுத்து, இன்று காலை, இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான இருவரும் 45 மற்றும் 47 வயதுடைய ஆண்கள் என்றும், வடமேற்கு லண்டன் மற்றும் மத்திய லண்டன் பகுதிகளில் வசித்து வருபவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோக்கத்துடன் தீவைத்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் லண்டன் காவல் நிலையம் ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர்கள் தற்போது காவல்துறைக் காவலில் உள்ளனர்.
இந்த நிலையில், பெருநகர காவல்துறை மூன்றாவது சந்தேக நபரைத் தேடி வருவதாகவும், இதில் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய அனைவரையும் அடையாளம் கண்டு கைது செய்ய முயற்சிப்பதாகவும் உறுதியளித்துள்ளது.
முகமூடி அணிந்த மூவர்
திங்கட்கிழமை அதிகாலையில், யூத வழிபாட்டுத் தலத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்களில் தீப்பிழம்புகள் பரவியதால் ஏற்பட்ட தொடர்ச்சியான பயங்கர வெடிச்சத்தங்களால், பீதியடைந்த குடியிருப்பாளர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலையடுத்து சுமார் 1.45 மணியளவில் ஆறு தீயணைப்பு வாகனங்களும் 40 தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முதற்கட்ட விசாரணையில், முகமூடி அணிந்த மூன்று சந்தேக நபர்கள் தீயை மூட்டிவிட்டுத் தப்பிச் செல்வது கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்தது.
தீ பரவத் தொடங்கியபோது, ஆம்புலன்ஸ்களுக்குள் இருந்த எரிவாயு சிலிண்டர்கள் தீப்பற்றிக்கொண்டதால் இந்த வெடிப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.




