குழந்தைகள் பாதுகாப்பில் தோல்வி – மெட்டாவிற்கு ரூ.3,100 கோடி அபராதம்

2 Min Read

சமூக ஊடகங்கள் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை அடிமைப்படுத்துவதாகவும், அவர்களின் மனநலனை பாதிப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டு உள்ளது.

அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்தியாவிலும், இந்த தடையை அமுல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மெட்டாவிற்கு ரூ.3,100 கோடி அபராதம்

இந்நிலையில், சமூக ஊடகங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிவிட்டதாக மெட்டா நிறுவனத்திற்கு 375 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,100 கோடி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பாதுகாப்பில் தோல்வி - மெட்டாவிற்கு ரூ.3,100 கோடி அபராதம் | Meta Fined 375 Million For Child Exploitation

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் தாய் நிறுவனமாக மெட்டா விளங்குகிறது.

மெட்டாவின் சமூக ஊடகங்கள் பாதுகாப்பு குறித்து பயனர்களைத் தவறாக வழிநடத்தியதோடு, தனது தளங்களில் குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் தொடரவும் அனுமதித்ததாக குற்றஞ்சாட்டி, நியூ மெக்சிகோ தலைமை வழக்கறிஞர் ரவுல் டோரெஸ் தொடர்ந்த வழக்கில், நியூ மெக்சிகோ நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

7 வார காலமாக நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், குழந்தைகளின் மனநலனைத் தெரிந்தே பாதித்ததாகவும், தனது சமூக ஊடகத் தளங்களில் குழந்தைகள் பாலியல் சுரண்டல் குறித்த தனது அறிவை மறைத்ததாகவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குழந்தைகளின் பலவீனத்தையும் அனுபவமின்மையையும் நியாயமற்ற முறையில் பயன்படுத்திக்கொள்ளும் “மனசாட்சியற்ற” வர்த்தக நடைமுறைகளில் மெட்டா ஈடுபட்டது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக 2023 ஆம் ஆண்டில் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு இரகசிய நடவடிக்கையில் புலனாய்வாளர்கள், 14 வயதுக்குட்பட்ட பயனர்களைப் போல நடித்து மெட்டாவின் சமூக ஊடகங்களில் கணக்குகளை உருவாக்கினர்.

இவர்களுக்கு தவறான உள்ளடக்கங்கள் காட்டப்பட்டதோடு, அது போன்ற உள்ளடக்கங்களை விரும்புவர்களிடமிருந்து நட்பு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்தே பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

75,000 மீறல்களை நடுவர் குழு கண்டறிந்து, ஒவ்வொன்றிற்கும் 5,000 டொலர் வீதம் அபராதம் விதித்துள்ளது.

குழந்தைகளின் பாதுகாப்பை விட லாபத்திற்கு முன்னுரிமை அளித்த மெட்டாவின் முடிவால் விலை கொடுத்த ஒவ்வொரு குழந்தைக்கும் குடும்பத்திற்கும் கிடைத்த ஒரு வரலாற்று வெற்றி” என நியூ மெக்சிகோ தலைமை வழக்கறிஞர் ரவுல் டோரெஸ் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள மெட்டா, “எங்கள் தளங்களில் மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். மேலும்,தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தையோ கண்டறிந்து அகற்றுவதில் உள்ள சவால்கள் குறித்தும் தெளிவாக இருக்கிறோம்.” என கூறியதோடு, இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *