‘டிட்வா’ சூறாவளி காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த பதுளை மாவட்டத்தின் கந்தகெட்டியபகுதியில் அமைந்துள்ள “பதுளு ஓயா மகா நீர்ப்பாசனத் திட்டத்தை” ரூ. 324.43 மில்லியன் செலவில் நிரந்தரமாகப் புனரமைக்கும் பணிகள் நேற்று (03) முற்பகல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
சூறாவளி காரணமாக இந்த நீர்ப்பாசனத் திட்டத்தின் பல பகுதிகள் உடைப்பெடுத்து முழுமையாக சேதமடைந்தன.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ், பிரதேச விவசாய மக்கள் மற்றும் முப்படைகளின் பங்களிப்புடன் மிகக் குறுகிய காலத்திற்குள் இது தற்காலிகமாகப் புனரமைக்கப்பட்டது.
இந்தத் தற்காலிகப் புனரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, விவசாயிகளின் அடுத்தகட்ட பயிர்ச்செய்கை பாதிக்கப்படாதவாறு 2026 ஜனவரி முதல் விவசாய நடவடிக்கைகளுக்காக மீண்டும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
தற்காலிகச் சீரமைப்புடன் மட்டும் நின்றுவிடாமல், விவசாயிகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்கும் நோக்கில் தற்போதைய அரசாங்கத்தினால் ரூ. 324.43 மில்லியன் பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நேற்று இதன் நிரந்தரப் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
1,775 ஏக்கர் பரப்பளவில் விவசாயப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் பதுளு ஓயா மகா நீர்ப்பாசனத் திட்டத்தின் ஊடாக, அப்பகுதி விவசாய நடவடிக்கைகளுக்கு நீண்டகால மற்றும் நிலையானதொரு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மகா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களுடன் நடைபெற்ற இந்த ஆரம்ப விழா நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்ல, கந்தகெட்டிய பிரதேச சபையின் தவிசாளர் ஹர்ஷ ரத்நாயக்க உள்ளிட்ட பிரதேச அரசியல் தலைமைகளும், பதுளை மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், பெருந்திரளான விவசாயப் பெருமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.



