சாவகச்சேரி, நாவற்குழி பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் தடைசெய்யப்பட்ட அமைப்பான எல்டிடிஈ (LTTE) அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் காணொளிகளைப் பகிர்ந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2026 மே 31 அன்று நாவற்குழி பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடப்பட்ட பாடல்களை, குறித்த இளைஞர் தனது சமூக வலைதளக் கணக்கில் அந்த அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் எடிட் செய்து, சுயமாகக் குரல் பதிவு செய்து பதிவேற்றியதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இந்த இளைஞர் கடந்த ஜூன் 02 ஆம் திகதி யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது 1978 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 3 (u) பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (03) சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இந்த இளைஞர், எதிர்வரும் ஜூன் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இசை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு பொலிஸார் அனுமதி வழங்குவதில்லை என சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என இலங்கை பொலிஸார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் அடிப்படைச் சட்டமான அரசியலமைப்பு மற்றும் ஏனைய சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்துச் செயற்படுவது அனைத்துப் பிரஜைகளினதும் பொறுப்பாகும் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.



