பகல் டெஸ்ட் போட்டியிலும் இனி இளஞ்சிவப்பு பந்துக்கு அனுமதி

1 Min Read

டெஸ்ட் கிரிக்கெட்டில் போதிய வெளிச்சமின்மை பாதிப்பை குறைக்கும் நடவடிக்கையாக இளஞ்சிவப்பு பந்தை சோதனை முயற்சியாக பயன்படுத்த சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

போதிய வெளிச்சமின்மையால் பதிக்கப்பட வாய்ப்பு உள்ள டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் போட்டியிடும் இரு அணிகளினதும் முன்கூட்டிய ஒப்புதலுடனேயே சிவப்புப் பந்தில் இருந்து இளஞ்சிவப்புப் பந்துக்கு மாற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அஹமதாபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐ.சி.சி. சபைக் கூட்டத்தில் தலைமை நிறைவேற்றுக் குழு முன்வைத்த பரிந்துரைகளுக்கு ஐ.சி.சி. இவ்வாறு ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை பகலிரவு டெஸ்ட் போட்டிகளுக்கு மாத்திரமே இளஞ்சிவப்பு பந்து பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் பகல் டெஸ்ட் போட்டியில் ஆட்டத்தை தொடரும் வகையில் சிவப்புப் பந்தில் இருந்து இளஞ்சிவப்பு பந்துக்கு மாற புதிய சோதனை முயற்சியின் மூலம் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோன்று ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் தாகசாந்தி இடைவெளையின்போது பயிற்சியாளர்கள் அல்லது நியமிக்கப்பட்ட உதவியாளர் ஒருவர் மைதானத்திற்குச் சென்று அணி வீரர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை தாகசாந்தி இடைவேளையில் வீரர் ஒருவரே பயிற்சியாளரின் செய்தியை மைதானத்தில் உள்ள வீரர்களுக்கு எடுத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று டி20 சர்வதேச போட்டிகளில் இன்னிங்ஸ் இடையிலான இடைவேளை 15 நிமிடங்கள் என்பதோடு அதன்பின் போட்டி ஆரம்பிக்கும்போது துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

துடுப்பாட்ட வீரர்கள் கிரீஸிற்குள் நகர்ந்து விளையாடும் போது, லெக்-சைட் வைட்களை நடுவர்கள் துல்லியமாக தீர்மானிக்க உதவும் வகையில் வழிகாட்டும் கோடுகளை பயன்படுத்தும் நடைமுறை நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *