நட்பு நகர வேலைத்திட்டத்தின் கீழ் 26 நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2026 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுக்கமைய நகர அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் அதன்கீழ் ‘நட்பு நகரம்’ எனும் தொனிப்பொருளில் அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
‘பொதுமக்கள் மற்றும் பிரதேச ரீதியான சமூகங்களின் வசதிகள் மற்றும் ஆரோக்கியத்திற்கான சிறிய நகரங்களை அபிவிருத்தி செய்தல்’ எனும் பிரதான நோக்கத்துடன் இவ்வேலைத்திட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 25 நகரங்களில் அத்தியாவசிய அபிவிருத்தி நடவடிக்கை என அடையாளங் காணப்பட்டு மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது
அந்த செயற் திட்டத்தை இந்த வருட இறுதிக்குள் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, ‘நட்பு நகரம்’ வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்ப கட்டத்தில் அடையாளங் காணப்பட்டுள்ள 23 நகரங்களுக்கான உத்தேச கருத்திட்டங்கள் அமுல்படுத்தப்படும். அதற்காக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள 581 மில்லியன் ரூபா நிதியை கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் ஒதுக்குவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



