சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டிருந்த புளத்சிங்கள பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரை வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் நேற்று கைதுசெய்துள்ளனர்.டுபாய், மோல்டோவா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில்,தொழில்வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாக, பல பேரிடம் இலட்சக்கணக்கில் நிதி மோசடி செய்த இந்நபர்,நீண்ட காலம் வௌிநாடொன்றில் மறைந்திருந்தார். பொதுமக்களால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளின் பிரகாரம் இவர் தேடப்பட்டு வந்திருந்தார். இந்நிலையில், அண்மையில் இவர், நாட்டுக்கு வந்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன. துபாய் சுத்தா எனப்படும் நிஷ்ஷங்க பிரியதர்ஷனவான இவர்,ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவருமாவார்.இறுதியாக கிரியுல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து ரூ.07 இலட்சம் பணம் பெற்றுக்கொண்டு, வாக்குறுதியளித்த வேலைவாய்ப்பை வழங்கத் தவறியதாக இவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
வெளிநாட்டில் தங்கியிருந்து அண்மையில் நாடு திரும்பியிருந்த இந்நபர் கடுவெல பகுதியில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், இவரைக் கைது செய்ய அதிகாரிகள் முயன்றபோது, தமது வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்ற வேளையில் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் புளத்சிங்கள பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரான இவர், சமூக ஊடகங்களை பயன்படுத்தி இந்த மோசடி நடவடிக்கையை முன்னெடுத்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இதுபோன்ற மோசடிகளுக்காக இதற்கு முன்னரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (02) குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இதேவேளை,வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக ஆட்களை இணைத்துக்கொள்வதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் அவசியம் என்றும், அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்றும் பணியகம் வலியுறுத்தியுள்ளது.
இந்நபரிடம் பணம் வழங்கி ஏமாறியோர் அல்லது இவரின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவை 011 288 2229 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.



