மலையகப் பகுதிகளில் பாதியில் கைவிடப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டங்கள் முழுமையாகக் கட்டி முடிக்கப்படவுள்ளன.கடந்த அரசாங்கங்களின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்த இத்திட்டங்கள் பாதியளவில்,கைவிடப்பட்டும் இன்னும் சில தரமற்றைவையாகவும் உள்ளன.இவ்வேலைத் திட்டங்களை பூரணமாக முடிப்பதற்கு 600 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
இதற்கான நிதி 2025 பட்ஜட்டில்,ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:
மலையகத்தில்,கடந்த அரசாங்கங்களின் காலத்தில் அவசர, அவசரமாகக் கட்டப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்ட வீடுகள் வசிப்பதற்கு தகுதியற்றவையாகக் காணப்படுவதாக மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும். அதேவேளை,இன்னும் சில வீடுகள் கட்டப்பட்ட நிலையில்,பாதியளவில் கைவிடப்பட்டுள்ளன.இவற்றை முழுமையாகக் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் இவ்வீடுகள் உரியவர்களிடம் கையளிக்கப்படும்.
நாட்டில்,கடந்த 2022ஆம் ஆண்டு நிலவிய அத்தியாவசியப் பொருட்கள், மருந்து மற்றும் எரிவாயு தட்டுப்பாடு போன்றதொரு நிலை மீண்டும் ஏற்படுமென எதிர்க்கட்சியினர் பகற்கனவு கண்டனர். மக்கள் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுவார்கள் என இவர்கள்,எதிர்பார்த்தனர். ஆனால்,விலை ஏற்றம் இருந்தாலும் தட்டுப்பாடு இன்றி மக்கள் இன்று பொருட்களைப் பெறுகின்றனர். கடந்த கால உலகளாவிய நெருக்கடிகளால் 350 ரூபா வரை உயர்ந்திருந்த அமெரிக்க டொலரின் மதிப்பு, தற்போது 325 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த அரசாங்கத்தின் முறையான அணுகுமுறையும் பொருளாதார திட்டமுமே இதற்கு காணரம்.இதன் மூலம் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டு எதிர்க்கட்சியினரின் பகற்கனவு பலத்த பேரிடியாக மாறியுள்ளது.வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டுக் கடன்களின்றி, நாட்டின் சொந்த நிதியைப் பயன்படுத்தி ரம்புக்கனை – கலவெல அதிவேக நெடுஞ்சாலைப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டின் தனிநபர் வருமானமும் 5,000 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், டீசலுக்கு 100 ரூபாயும், பெற்ரோலுக்கு 20 ரூபாயும் அரசாங்கம் மானியமாக வழங்கி வருகிறது.
பாராளுமன்றத்திலும் வெளியேயும் கூக்குரலிட்டு சத்தமிடுபவர்கள் அனைவரும் கடந்த காலத்தில் ஊழல் மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்டு, நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்பவர்களாவர். அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரிவதைப் போல, சிறைக்குச் செல்லவிருக்கும் இவர்களது சத்தமும் விரைவில் அடங்கிவிடும்.கடந்த காலத்தில் ஆட்சியைப் பிடிக்கவும் தக்கவைக்கவும் அரசியல்வாதிகள் பயன்படுத்திய ‘இனவாதம்’ இன்று இலங்கையில் முற்றிலும் காலாவதியாகிவிட்டது. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இனவாதத்திற்கு எதிராகவே தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளனர்.



