இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அண்மையில் வீசிய ‘தித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள உள்நாட்டு மீன்பிடிச் சமூகங்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும், அவர்களின் மீள்திறனை வலுப்படுத்துவதற்கும் புதிய கூட்டுத் திட்டம் ஒன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) ஆகியன இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளன.
இதற்கான உத்தியோகபூர்வ உடன்படிக்கை கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகத்தில் வைத்து அண்மையில் கையெழுத்திடப்பட்டது. ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமடா மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான FAO பிரதிநிதி விம்லேந்திர ஷரண் ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வு கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் முன்னிலையில் நடைபெற்றது.
ஜப்பானிய அரசாங்கத்தின் முழுமையான நிதியுதவியுடன் மொத்தம் 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 40 கோடி இலங்கை ரூபாய்) செலவில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டம், வரும் 2026 ஜூன் முதல் 2027 நவம்பர் வரை அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் செயற்படுத்தப்படவுள்ளது.
‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் அவசர நிலைமைகளின் போது நீர்த்தேக்கங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர் காரணமாக, பெருமளவிலான வளர்ப்பு மீன் குஞ்சுகளும் வளர்ச்சியடைந்த மீன்களும் அழிவடைந்துள்ளன. அத்துடன், மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உட்கட்டமைப்புகளும் பாரியளவில் சேதமடைந்துள்ளன. இது மீன்களின் இயற்கையான இனப்பெருக்கத்தையும் வளர்ப்புச் சுழற்சிகளையும் முற்றாகப் பாதித்துள்ளதால், ஏற்கனவே பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான உள்நாட்டு மீனவக் குடும்பங்களின் வருமானம் மற்றும் உற்பத்தி பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு, உள்நாட்டு மீன்பிடி உற்பத்தியை மிக விரைவாக மீட்டெடுக்கும் நோக்கில் இத்திட்டத்தின் கீழ் பல முக்கிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலுள்ள பெரியளவிலான நீர்த்தேக்கங்களில் மீன் குஞ்சுகளை விடுதல், அதிநவீன மிதக்கும் மீன் வளர்ப்பு கூடுகளை வழங்குதல், மீன் இனப்பெருக்கத்திற்கு அவசியமான ஹோர்மோன்களைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் எதிர்காலத்தில் வெள்ளம் ஏற்படும் போது நீர்த்தேக்கங்களிலிருந்து மீன்கள் வெளியேறுவதைத் தடுப்பதற்கான சிறப்புத் தடுப்பு வலைகளை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
மேற்படி திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தில் உள்ள 30 நீர்த்தேக்கங்களைச் சேர்ந்த 1,504 மீனவர்கள் நேரடியாக வாழ்வாதார உதவிகளைப் பெறவுள்ளனர்.
இதன் மூலம் அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 6,000 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உணவுப் பாதுகாப்பு, சிறந்த போஷாக்கு மற்றும் நிலையான வருமான வழிகளைப் பெற்றுப் பயனடையவுள்ளனர்.



